தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஜூலை 11 - வெள்ளிக்கிழமை) அதிகாலை 05.00 மணி முதல் 12ஆம் நாள் சனிக்கிழமை காலை 05.00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா. துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் 255ஆவது ஜயந்தி விழா அவரது நினைவிடத்தில் அரசு சார்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த விழாவில், யாதவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அசம்பாவித சம்பவம் ஏதுமில்லாமல் அமைதியான முறையில் விழாவை நடத்திட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு காவல் கூடுதல் கண்காணிப்பாளர், 11 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உள்பட மொத்தம் 700 காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லையில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. நெடுஞ்சாலை ரோந்து, தலைவர்களின் சிலைகள் மற்றும் பிரச்னைக்குரிய கிராமங்களில் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில் சட்ட ஒழுங்கை பராமரித்திடவும், மாவட்ட ஆட்சியரால் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 5 மணிமுதல் 12 ஆம் தேதி காலை 5 மணிவரை கட்டாலங்குளம் பகுதியிலும் மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் ஜோதி, கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்குள் அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும், விழாவுக்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் இத்தடையுத்தரவானது, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |