ரயில்வே பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகம் வழியாக 5 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மும்பை- அகமதாபாத் இடையே ரூ.60,000 கோடியில் புல்லட் ரயில் சேவை, 9 வழித்தடங்களில் அதிவேக ரயில்கள், வைர நாற்கர ரயில் திட்டம் உள்பட ரயில்வே துறையை நவீனப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் அரசு - தனியார் திட்டங்களை ஊக்குவிக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை முடங்கியது. இரண்டாம் நாளான செவ்வாய்க் கிழமை 2014-15ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். அண்மையில் பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்ட நிலையில் ரயில்வே பட்ஜெட்டில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
ஒரு ரூபாயில் 94 பைசா செலவு
ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் சதானந்த கவுடா பேசியதாவது:
இந்திய ரயில்வே நாள் ஒன்றுக்கு 12617 ரயில்களை இயக்குகிறது. இதில் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள்தொகைக்குச் சமமானது. நாடு முழுவதும் நாளொன்றுக்கு 7421 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 30 லட்சம் டன் சரக்குகள் கையாளப் படுகின்றன.
கடந்த 2013-14ம் நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.1,39,558 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் பல்வேறு வகை செலவினங்களுக்காக ரூ.1,30,321 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது ரயில்வே சம்பாதிக்கும் ஒரு ரூபாயில் 94 பைசா செலவிடப்படுகிறது. 6 பைசா மட்டுமே மிச்சமாகிறது.
தற்போது செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி என்ற வகையில் 10 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது
கடந்த 30 ஆண்டுகளில் ரூ.1,57,883 கோடி மதிப்பீட்டில் 676 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில் 317 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. 359 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அந்தத் திட்டங்களை முடிக்க ரூ.1,82,000 கோடி தேவைப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் 99 புதிய ரயில் பாதை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒரு திட்டம் மட்டுமே நிறை வேற்றப்பட்டுள்ளது. குறிப் பிட்ட 4 திட்டங்கள் 30 ஆண்டு களாக இழுத்தடிக்கப்படுகிறது.
58 புதிய ரயில்கள் அறிவிப்பு
ரயில்வே பட்ஜெட்டில் 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 ஜனசாதாரண் ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்களும் அடங்கும். 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்கள் அறிவிப்பில் தமிழகத்துக்கு 5 ரயில்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதன்படி சாலிமர் - சென்னை பிரீமியம் ஏசி விரைவு ரயில், ஜெய்ப்பூர் - மதுரை பிரீமியம் விரைவு ரயில், அகமதாபாத் - சென்னை வாரமிருமுறை விரைவு ரயில், சென்னை - விசாகப்பட்டினம் வாராந்திர விரைவு ரயில், யஷ்வந்த்பூர் - ஒசூர் இடையே வாரத்தில் 6 நாள்களுக்கு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளன.
மேலும் தமிழகத்தில் மேல்மருவத்தூர், வேளாங்கண்ணி ஆகிய புனிதத் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர ஜோதிர்லிங்க சுற்றுலா பாதை, கிறிஸ்தவ சுற்றுலா பாதை, முஸ்லிம் சுற்றுலா பாதை என நாட்டின் பல்வேறு புனித தலங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதிவேக ரயில்களுக்கு ரூ.100 கோடி
9 முக்கிய வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி மைசூர்-பெங்களூர்-சென்னை, ஹைதராபாத் - சென்னை, டெல்லி - ஆக்ரா, டெல்லி-சண்டிகர், டெல்லி - கான்பூர், நாக்பூர் - பிலாஸ்பூர், மும்பை- கோவா, மும்பை - அகமதாபாத், நாக்பூர் - செகந்திராபாத் ஆகிய 9 வழித்தடங்களில் மணி்க்கு 160 கி.மீட்டர் முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில்கள் இயக்கப்படும். இத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், ரயில்களில் எஸ்எம்எஸ், தொலைபேசி மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும். முன்னணி நிறுவனங்களின் உணவு வகைகள் ரயில் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
பால், காய்கறிகளுக்கு சிறப்பு ரயில்
பால், காய்கறிகளை கொண்டு செல்ல சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படும். பொருட்கள் கெடாமல் இருக்க குளிர்சாதன வசதி செய்யப்படும். இதற்காக முதல்கட்டமாக 10 இடங்களில் கிட்டங்கிகள் அமைக்கப்பட உள்ளன.
ஏ1, ஏ அந்தஸ்து பெற்ற ரயில் நிலையங்களில் வைஃபை எனப்படும் கம்பியில்லா இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும்.
நாட்டில் 30348 லெவல் கிராசிங்குகள் உள்ளன. இவற்றில் 11563 ஆளில்லாதவை. இந்த ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குகளை ஒழிக்க ரூ.1785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்.பி.எப்.) புதிதாக 17,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் ஆர்.பி.எப். படையில் விரைவில் 4,000 பெண் போலீஸாரும் நியமிக்கப்பட உள்ளனர்.
எரிபொருள் விலைக்கேற்ப கட்டணம் உயரும்
இணையம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இ-டிக்கெட் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். மேலும் ஒரே நேரத்தில் 1.2 லட்சம் பேர் ரயில்வே இணையதளத்தைப் பயன்படுத்த முடியும்.
2014-15-ம் நிதியாண்டில் ரயில்வே துறை வருவாயை ரூ.1.64 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1.49 லட்சம் கோடி செலவுத் தொகையாக இருக்கும்.
ரயில்வே துறையில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில்
அண்மையில் உயர்த்தப்பட்ட பயணிகள், சரக்கு ரயில் கட்டணங்கள் மூலம் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8,000 கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் வைர நாற்கர ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி தேவைப்படுகிறது. ஒரு புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற மட்டும் ரூ.60,000 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்காக ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று பட்ஜெட் உரையில் அமைச்சர் கவுடா தெரிவித்தார்.
இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் நிருபர்களிடம் கூறியபோது, மும்பை- அகமதாபாத் இடையே ரூ.60,000 கோடியில் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற ரயில்வே துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, வைர நாற்கர ரயில் திட்டத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
58 புதிய ரயில்கள் அறிவிப்பு
5 ஜனசதாரன் ரயில்கள், 5 பிரிமியம் ரயில்கள், 6 ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில்கள், 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள், 7 புறநகர் மின்சார ரயில்கள் என மொத்தம் 58 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் 11 ரயில்களின் பயண தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இயக்கப்படும் வழித்தடங்கள்
அகமதாபாத் - சூரத் - தர்பாங்கா, ஜெய்நகர் - மும்பை, மும்பை - கோரக்பூர், சஹர்ஸா - மோதிஹாரி (பிஹார்) - ஆனந்த் விஹார் (டெல்லி), சஹர்ஸா - அமிருதசரஸ் ஆகிய வழித்தடங்களில் ஜனசதாரன் ரயில்கள் இயக்கப்படும்.
மும்பை சென்ட்ரல் - புது டெல்லி, ஷாலிமர் - சென்னை, செகந்திராபாத் - ஹஸ்ரத் நிஜாமுதீன், ஜெய்ப்பூர் - மதுரை, காமாக்யா - பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் பிரிமியம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
விஜயவாடா - புது டெல்லி, நாக்பூர் - புனே, நாக்பூர் - அமிருதசரஸ், நாகர்லாகுன் - புது டெல்லி, லோகமானிய திலகர் (மும்பை குர்லா) - லக்னோ, நிஜாமுதீன் - புனே ஆகிய வழித்தடங்களில் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
அகமதாபாத் - சென்னை, விசாகப்பட்டினம் - சென்னை, அகமதாபாத் - பாட்னா, பெங்களூர் - மங்களூர், பெங்களூர் - ஷிமோகா, பாந்த்ரா (மும்பை) - ஜெய்ப்பூர், பிடார் - மும்பை, சாப்ரா - லக்னோ, பெரோஸ்பூர் - சண்டிகர், குவாஹாட்டி - நாகர்லாகுன், குவாஹாட்டி - மர்கோங்க்செலக் (அசாம்), கோரக்பூர் - ஆனந்த் விஹார், ஹாபா - நாக்பூர் - பிலாஸ்பூர், ஹஸுர் சாஹேப் நந்தத் (மகாராஷ்டிரா) - பிகானீர், இந்தோர் - ஜம்மு தாவி, காமாக்யா - கட்ரா, கான்பூர் - ஜம்மு தாவி, மும்பை குர்லா - அஸம்கர், மும்பை - பல்ஹார்ஷா காஸிபெத், மும்பை - பாலிடானா, புது டெல்லி - பட்டிண்டா, புது டெல்லி - வாரணாசி, பாரதீப் - ஹவுரா, பாரதீப் - விசாகப்பட்டினம், ராஜ்கோட் - ரேவா, ராம்நகர் ஆக்ரா, டாடா நகர் பையப்பனஹல்லி (பெங்களூர்) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிகானீர் - ரேவாரி, தார்வாட் - தாண்டேலி, கோரக்பூர் - நவ்டான்வா, குவாஹாட்டி - மெண்டிபதார், ஹட்டியா ரூர்கேலா, பைண்டூர் காசர்கோடு, ரங்கபரா வடக்கு - ராங்கியா, யெஷ்வந்த்பூர் - தும்கூர் ஆகிய வழித்தடங்களில் பயணிகள் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய ரயில் பாதை
கேதார்நாத் - பத்ரிநாத், நயாகர் - பன்ஸ்பானி, ஷிமோகா - மங்களூர் உள்ளிட்ட 18 புதிய வழித்தடங்களில் ரயில்வே பாதையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடங்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் கோடா, மங்களூர் சுரத்கால், ரேவாரி மகேந்திரகர் உள்ளிட்ட 10 வழித்தடங்களை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இது தவிர சில இடங்களில் 3-வது மற்றும் நான்காவது ரயில் பாதையை அமைப்பதற்கும், அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் குறித்தும் அறிவிக்கப் பட்டுள்ளது.
தகவல்:
தி இந்து |