காயல்பட்டினம் நகராட்சியில் 2007ம் ஆண்டு முதல், ஒப்பந்தம் அடிப்படையில், 14 பேர் பணி செய்து வந்தனர். அதில் 10 பணியாளர்கள், ரோஜா
ஆண்கள் சுய உதவி குழு என்ற அமைப்பின் பெயரிலும், மீதி நபர்கள் தனிப்பட்ட முறையிலும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இவர்களில் அஸ்கர் என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். வாகனத்திற்கு நிரப்பும் டீஸல் செலவீனம் குறித்து எழுந்த புகார்களை தொடர்ந்து,
கடந்த ஜனவரி 2014இல் நடந்த நகர்மன்றக்கூட்டதில் ஒப்பந்தப்பணியாளர் அஸ்கரை தவிர, பிற
ஒப்பந்தப்பணியாளர்களுக்கு - 89 நாட்களுக்கு பணி நீட்டிப்பு - வழங்கப்பட்டிருந்தது.
பணி நீட்டிப்பு - மார்ச் மாதம் இறுதியில் முடிவுற இருந்ததால், மார்ச் மாதம் நடந்த நகர்மன்றத்தின் அவசர
கூட்டத்தில், மேஜை பொருளாக இவ்விஷயம் இணைக்கப்பட்டு, 13 ஒப்பந்தப்பணியாளர்களுக்கு - மேலும் 89 நாட்கள் பணி நீட்டிப்பு
வழங்கப்பட்டது.
இதற்கிடையில் - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், ஒப்பந்தப்பணியாளர்கள் நியமனம் குறித்து சில கேள்விகளை
எழுப்பவே, நகராட்சி ஆணையர் காந்திராஜ் - ஏப்ரல் 1 முதல் (ஒப்பந்த அடிப்படையில் தொழில் நுட்ப உதவியாளராக பணிப்புரியும் செந்தில் குமாரை
தவிர்த்து) 12 ஒப்பந்தப்பணியாளர்களை - பணிக்கு வரவேண்டாம் என தெரிவித்தார். பிறகு இந்த அறிவிப்பு, தேர்தல் காலகட்டம் என்ற
காரணத்திற்காக, 3 மாதங்கள் தள்ளிப்போடப்பட்டதாக தெரிகிறது.
கடைசியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட 89 நாட்கள், ஜூன் மாதம் இறுதியில் முடிவுற இருந்தாலும், ஜூன் மாதம் நடந்த காயல்பட்டினம்
நகர்மன்றத்தின் சாதாரண கூட்டத்தில், ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நீட்டிப்பு - கூட்டபொருளில் இடம்பெறவில்லை. எனவே ஜூன் மாதம் இறுதியில் - ஒப்பந்தப் பணியாளர்கள் 12 பேர், ஜூலை 1 முதல் பணிக்கு வரவேண்டாம் என
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜ் - பணியாளர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து - பணியாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நகராட்சியை முற்றுகையிட்டனர். பின்னர் - காவல்துறையினர் தலையிட்டு,
தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தலாம் எனக் கூறவே அவர்கள் கலைந்து சென்றனர்.
ஒப்பந்தப் பணியாளர்களுக்கு - பல்வேறு காரணங்களுக்காக, பணி நீட்டிப்பு வழங்கமுடியாது என நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அவ்வேளையில்
நகராட்சி ஆணையர் தெரிவித்ததாக தெரிகிறது.
ஒப்பந்தப் பணியாளர்களில் சிலர் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக்கை சந்தித்ததாகவும் தெரிகிறது. அவரும் - ஒப்பந்தப் பணியாளர்களுக்கு,
பல்வேறு காரணங்களை மேற்கோள்காட்டி, பணி நீட்டிப்பு வழங்க முடியாது என தெரிவித்ததாக தெரிகிறது.
ஒப்பந்தப்பணியாளர்கள் 2007ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முறை, ரோஜா ஆண்கள் சுய உதவி குழுவின் பின்னணி,
ஒப்பந்தப் பணியாளர்கள் பலரின் மீது தொடர்ந்து எழுந்து வந்த புகார்கள் போன்ற காரணங்களுக்காக - ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு
வழங்கப்படவில்லை என தெரிகிறது.
ஞாயிறு அன்று நகரில் நடைபெற்ற அம்மா உணவகம் அடிக்கல் நாட்டும் விழாவின் போது ஒப்பந்தப் பணியாளர்கள்
சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் மனு வழங்கினர்
புகைப்படங்களில் உதவி:
எம்.ஜஹாங்கிர்
மற்றும்
'தமிழன்' முத்து இஸ்மாயில்
|