காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 07.06.2014 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில், கல்லூரியின் தலைவர் எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கணக்குத் தணிக்கையாளர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு பேருரையாற்றினார்.
பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பில், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.ஏ.எம்.முஹம்மத் ஸத்தார் மஹ்ழரீ ஏற்புரையாற்றினார்.
கல்லூரியின் பேராசிரியர்கள், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அய்யம்பேட்டை ஸுபுலுஸ் ஸலாம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ பி.எம்.ஜியாஉத்தீன் அஹ்மத் பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கர்நாடக மாநிலத்தின் மார்க்கத் தீர்ப்பாளர் (முஃப்தீ) மவ்லவீ அஸ்ஸெய்யித் ஷாஹ் ஷம்சுல் ஹக் காதிரீ அல்ஹஸனீ வல் ஹுஸைனீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். அவருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
கடந்த கல்வியாண்டில், கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகரப் பிரமுகர்கள் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
காயல்பட்டினத்திலுள்ள மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், அந்த மத்ரஸாக்களில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் பணப்பரிசு வழங்கப்படுவது வழமை. அதனடிப்படையில், இவ்விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற இரண்டு மாணவர்களுக்கும் ரூபாய் 2,500 பணப்பரிசை - அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் கையளிக்க, சிறப்பு விருந்தினரான முஃப்தீ அவற்றை மாணவர்களுக்கு வழங்கினார்.
கல்லூரியின் உதவி செயலாளர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும் காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், 3 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டமும், 3 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும் பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பட்டமளிப்பு விழா நடைபெற்ற நாளன்று மாலையில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற - காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த மாணவர் ஹாஃபிழ் எம்.ஓ.முஹம்மத் சுலைமான், தஃப்ஸ் முழங்க - அரபி பைத்துகள் பாடப்பட்டு நகர்வலமாக அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
படங்கள்:
ஃபாஜில் ஸ்டூடியோ
மஹ்ழரா அரபிக்கல்லூரியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |