தூத்துக்குடி மாவட்டத்தில், மழை நீர் சேகரிப்பு கட்டமைக்கப்பட்டால் மட்டுமே புதிய கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் நகராட்சிகளும், பேரூராட்சிகளும் விரிவடைந்து வருவதால் திறந்தவெளி நிலங்கள், சாலைகளாலும், கட்டிடங்களாலும் மூடப்படுகின்றன. எனவே, மழைநீர் இயற்கையாக பூமிக்குள் ஊடுருவும் வாய்ப்புகள் பெருமளவில் குறைந்து வருகின்றது. இதைக் கருத்திற்கொண்டு அரசு மழை நீர் சேகரிப்பு அவசியத்தை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொழியும் காலங்களில் அதனை முறையாக சேகரித்தால் மழை பொழியாத காலங்களில் அந்த நீரைப் பயன்படுத்த இயலும். மழை நீரை வீணாக ஒடவிடாமல் ஓரிடத்தில் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குறிப்பாக ஆறு, குளம், ஏரி, ஊரணி போன்றவற்றில் மழைநீர் வரத்து இருந்தால் சுற்றுப்புறமுள்ள அனைத்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.
மழை நீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீரின் அளவு தாழ்ந்து போகாமல் தடுப்பதுடன் நீரின் தரம் குறையாமல் இருக்கும், பொழிகின்ற மழையை வீண்போகாமல் காப்பது மழையற்ற காலங்களில் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகுக்கும்.
நீரின் பயன்பாடு அதிகரிப்பதை உணர்ந்த தமிழக அரசு மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக அறிவித்து மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய விளக்கங்களை அளித்ததுடன் கட்டமைப்புகளை அமைக்க வேண்டியதை கட்டாயப்படுத்தி அரசு ஆணையிட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் பொதுப்பணித்துறை 695, பேரூராட்சிகள் 608, மாநகராட்சி 35, நகராட்சிகள் 44, கிராம ஊராட்சிகள் 358, அரசு பள்ளிகள் 459, நெடுஞ்சாலைத்துறை 25, மின்சாரவாரியம் 130, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 98, கூட்டுறவு நிறுவனங்கள் 173, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் 205 ஆக மொத்தம் 6320 அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் முறையாக சேகரிக்கப்பட்டு வருகின்றது.
மற்ற அரசு கட்டிடங்களிலும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், புதியதாக கட்டப்பட்டும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வைத்தால்தான் கட்டிட அனுமதி வழங்கப்படும். எனவே, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு மாவட்டத்திலுள்ள தனியார் கட்டிடங்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும்.
தற்போது பெய்துள்ள பருவமழையால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தாமிரபரணி, கோரம்பள்ளம், வைப்பாறு பகுதிகளில் உள்ள 134 குளங்களில், 55 குளங்கள் நிரப்பியுள்ளன. மீதமுள்ள குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. 12 ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 358 குளங்கள் 75 சதவீதம் நிரப்பியுள்ளன. மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை அனைவரும் அறிந்துகொண்டு, மழைநீர் சேகரிப்பு மக்கள் இயக்கமாக மாற பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தெரிவிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |