கேரள மாநிலம் - கோழிக்கோடு நகரில் வசிக்கும் காயலர்களின் அயராத தொடர்முயற்சியின் பயனாக, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் துவங்கி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது காயல்பட்டினம் வழித்தடத்திலான கோழிக்கோடு - திருச்செந்தூர் விரைவுப் பேருந்து சேவை.
சேவை அறிமுகப்படுத்தப்பட்ட அன்று இயக்கப்பட்ட அதே பேருந்துதான் இன்றளவும் இயக்கப்படுவதாகவும், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளைச் சரி செய்யாமலும், போதிய பராமரிப்புகளை மேற்கொள்ளாமலும் இப்பேருந்துச் சேவை இயக்கப்பட்டு வருவதால், தற்போது நகரப் பேருந்தை (டவுண் பஸ்) விட தரம் குறைந்த நிலையில் அது இயங்கிக் கொண்டிருப்பதாகவும், கோழிக்கோடு நகரில் வசிக்கும் காயலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டப்படாத பிளவுகள், ஒட்டப்பட்ட டயர்கள், திரைச்சீலையுடன் ஜன்னல்கள் என கற்காலத்தை நினைவுகூரும் வகையில் இப்பேருந்து இயக்கப்பட்டு வருவது குறித்து, போக்குவரத்துக் கழகத்திற்கு - கோழிக்கோடு வாழ் காயலர்களை உள்ளடக்கிய மலபார் காயல் நல மன்றம் (மக்வா) சார்பிலும், காயலர்கள் தனிப்பட்ட முறையிலும் நேரில் வாய்மொழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் பல கோரிக்கைகளை வைத்தும், இன்றளவும் அப்பேருந்தில் எந்தப் பழுதும் சரிசெய்யப்படாதது மட்டுமின்றி, நாளுக்கு நாள் பழுதுகள் அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக வண்டியின் பயண நேரம் 60 நிமிடங்கள் அதிகரித்துள்ளதாகவும் பயணியர் மேலும் கூறினர்.
பல மணி நேரங்கள் பயணிக்க வேண்டிய இப்பேருந்தில் சாதாரண நாட்களில் பயணிப்பதே பெரும் அவதிக்குரியது எனும் நிலையில், மழைக்காலங்களிலோ - இப்பேருந்திற்கு உள்ளேயே குடை பிடித்துதான் பயணிக்க வேண்டியுள்ளதாகக் கூறிய அவர்கள், வண்டியின் மேற்கூரை, கண்ணாடி இல்லாமல் திரைச்சீலை தொங்க காட்சியளிக்கும் ஜன்னல் ஆகியவற்றின் காரணமாக, பெய்யும் மழை வண்டியின் முழுப் பரப்பையும் முழுமையாக நனைத்து பயணியரின் நிம்மதியை முற்றிலும் கெடுத்து விடுவதாக கோழிக்கோடு வாழ் காயலர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படங்களில் காணப்படுவதை விடவும் மோசமான நிலையிலேயே தற்போது பேருந்து இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோழிக்கோட்டிலிருந்து...
தகவல் & படங்கள்:
ரயீஸ்
[இச்செய்தியில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் கோப்புப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.] |