காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடை விரிவாக்கப் பணிகள் முடிவுறும் நிலையிலுள்ளது என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளிடம் ஒப்பந்தக்காரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடை, விரைவுத் தொடர்வண்டிகளின் அனைத்துப் பெட்டிகளும் நிற்கும் அளவிற்கு விரிவாக்கப்படாததால், வண்டியில் ஏறும்போதும் - இறங்கும்போதும் பயணியர் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை இருந்து வந்தது.
இதுகுறித்து, நகர முஸ்லிம் லீச் சார்பில் தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதே நேரத்தில், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தைப் பயன்படுத்தி, சென்னை - திருச்செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் ஏறி இறங்கும் பயணியர் அடிக்கடி விபத்திற்குள்ளாவது தொடர்கதையானது.
இதனைக் கருத்திற்கொண்டு, நகர முஸ்லிம் லீக் சார்பில் காயல்பட்டினம் நகரின் அனைத்துக் கட்சிகளைக் கூட்டி கலந்தாலோசித்த பின், இரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்துக் கட்சிகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
போராட்ட நாளுக்கு முன்பாக, அனைத்துக் கட்சி நிர்வாகிகளை, திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் சந்தித்துப் பேசுகையில், பாராளுமன்றத் தேர்தலையடுத்து புதிய ஆட்சி அமைந்த பிறகு, நடைமேடை விரிவாக்கப் பணிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன், ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு, நடைமேடை விரிவாக்கப் பணிகள் துவக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 25ஆம் நாள் சனிக்கிழமையன்று மாலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், இளைஞரணி நகரச் செயலாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக் ஆகியோர் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் சென்று நடைபெற்றுக்கொண்டிருந்த நடைமேடை விரிவாக்கப் பணிகளைப் பார்த்ததோடு, பணி ஒப்பந்தக்காரர் கருப்பசாமி பாண்டியனிடம் விபரம் கேட்டனர்.
நடைமேடை விரிவாக்கப் பணிகள் ஏறத்தாழ நிறைவுற்றுவிட்டதாகவும், மேடாக்கப்பட்ட நடைமேடையின் சில பகுதிகளில் கல் பதிக்கும் பணியும், வேலிச்சுவர் எழுப்பும் பணியும் மட்டுமே செய்ய வேண்டிய நிலையிலுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய நிலவரப் படி, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோர் எவ்வித ஆபத்துமின்றி தொடர்வண்டியில் ஏறவும், இறங்கவும் இயலும் என்றும், எனவே பொதுமக்கள் பிற தொடர்வண்டி நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை முழுமையாகப் பயன்படுத்தினால், நடைமேடையை உயர்த்தல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளையும் கேட்டுப் பெற இயலும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |