காயல்பட்டித்தில் இன்று (அக்டோபர் 30) 00.00 மணி துவங்கி, நள்ளிரவு முழுக்க இடி, மின்னலுடன் இதமழை பெய்துள்ளது. இதனால் நகரில் வழமை போல சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
00.30 மணியளவில் இடியோசை அதிகளவில் இருந்தது. காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் சாலையிலுள்ள ஏ.கே.அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரது இல்லத்தில் இடி தாக்கி, மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து, காயல்பட்டணம்.காம் இடம் அவர் தெரிவித்ததாவது:-
இன்று நள்ளிரவில், இடியோசையுடன் மழை பெய்துகொண்டிருந்தது. 00.30 மணியளவில் எங்கள் வீடே அதிரும் வகையில் இடியோசை கேட்டது. மற்றெல்லா இடங்களிலும் மின் வினியோகம் தடைபடாத நிலையிலும் என் வீட்டில் மின்தடை ஏற்பட்டது. சில நிமிடங்களில், பொருட்கள் கருகும் வாசனையை உணரவே, உடனடியாக வெளியே வந்து வீட்டின் மெய்ன் ஸ்விட்ச்சை ஆஃப் செய்ய ஓடினேன். அங்கோ, மின்கம்பி வடங்கள் எரிந்து கருகியிருந்தன.
என் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள 6 மின் விசிறிகளும் சேதமுற்றுள்ளன. மின்தடைக் காலங்களில் பயன்படுத்தப்படும் இன்வெர்ட்டர் கருவியும் செயலற்றுப் போய்விட்டது. வீட்டு தொலைபேசிக்கு இணைப்பு தரும் ப்ளாஸ்டிக் பெட்டியும் வெடித்துச் சிதறியுள்ளது.
என் வீட்டின் மாடியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியின் ஒரு பகுதி சேதமுற்றுள்ளதோடு, தொட்டியையொட்டி நிறுவப்பட்டிருந்த பீ.வி.சி. குழாய் வெடித்துச் சிதறி, சுமார் 15 அடி தொலைவுக்கு வீசியெறியப்பட்டுள்ளது.
என் வீட்டிலுள்ள முருங்கை மரத்தின் மேற்பகுதி கருகி, காய்களும் கருகியுள்ளது. மொத்த சேதத்தின் மதிப்பு சுமார் 35 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல்:
A.M.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |