தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சிக்கு - குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் வாங்கப்பட்டு, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக வைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளின் பொதுமக்கள் இத்தொட்டிகளில் கொட்டும் குப்பைகள், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களால் அதற்கென உள்ள வாகனத்தில் தொட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு, குப்பைகள் ஓரிடத்தில் கொட்டப்பட்டு, மீண்டும் வெறுமையான தொட்டிகள் மீண்டும் எடுத்த இடத்தில் வைக்கப்படும்.
குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாத சில இடங்களில்தான் ஆங்காங்கே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படும் நிலை இருக்கிறது என்றால், குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்ட சில இடங்களிலும், பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையால் குப்பைகளைத் தொட்டிக்குள் போடாமல், வாகனத்திலிருந்தவாறே தொட்டியை நோக்கி வீசியெறிவதும், அதனால் குப்பைகள் தொட்டிக்குள் விழாமல் ஆங்காங்கே சிந்திச் சிதறி, சுகாதாரக் கேட்டுக்குக் காரணமாவதும், வைக்கப்பட்டுள்ள தொட்டிகளுக்குத் தீ வைப்பதும், பின்னர் அது தொடர்பானவர்களே நகராட்சியைக் குறைகூறுவதும் வாடிக்கையாகிப் போனது.
அது மட்டுமின்றி, வீட்டுத் தோட்டங்களில் மொத்தமாகச் சேரும் குப்பைகளையும் பொறுப்பின்றி ஆங்காங்கே கொட்டும் நிகழ்வுகளும் தொடர்கதைக உள்ளது.
பார்க்க செய்திகள்:- 01 02 03
காயல்பட்டினம் 10ஆவது வார்டுக்குட்பட்ட பரிமார் தெருவில் இதுபோன்று வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி சில நாட்களுக்கு முன் காயிதேமில்லத் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், அத்தொட்டியில் குப்பைகளைக் கொட்டிய பொதுமக்கள், தற்போது தொட்டியின்றி இருப்பதால், சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாகக் கூறுகின்றனர்.
அவர்களுள் சிலர், அப்பகுதியை உள்ளடக்கிய 10ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்கிடம் முறையிட்டதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து, நகர்மன்றத் தலைவரிடம் வினவியபோது,
ஒவ்வொரு வார்டிலும் அந்தந்தப் பகுதி மக்களின் ஒருமித்த கருத்துக்கள் பெறப்பட்டு, அதனடிப்படையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. பரிமார் தெருவில் வைக்கப்பட்டிருந்த தொட்டி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டனர்.
ஒரு வார்டு தொடர்பான பிரச்சினையை, என்னை விட அந்தந்த வார்டு உறுப்பினர்கள்தான் நன்கறிந்திருப்பர் என்பதால், வார்டு உறுப்பினரிடம் முறையிடுமாறும், மக்களுக்காகவே இயங்கும் நகராட்சியில், அனைவரும் இணைந்து தெரிவிக்கும் முறையீடுகளுக்கு நகராட்சி நிச்சயம் செவிசாய்க்கும் என்றும் நான் அவர்களிடம் கூறினேன். அதே நேரத்தில் அவ்விடத்தில் தொட்டியில்லாததால் குப்பைகள் அதிகளவில் தேங்குவதைக் கருத்திற்கொண்டு, அங்கு குப்பைகளை அவ்வப்போது அகற்றிட சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்கிடம் இதுகுறித்து வினவியபோது,
குப்பை சேகரிக்கும் வாகனத்திற்காகக் காத்திருந்து பொதுமக்கள் குப்பைகளைக் கொடுப்பதில் உள்ள அவதியைக் கருத்திற்கொண்டே, அதிகமாகக் குப்பைகள் சேரும் பகுதிகளைக் கணக்கிட்டு, இதே எனது 10ஆவது வார்டில் இன்னும் 9 இடங்களுக்குக் குப்பைத் தொட்டிகள் தேவை என்ற நிலையிலும், பரிமார் தெருவிற்கு முன்னுரிமையளித்து ஒரு குப்பைத்தொட்டியை வைக்க ஏற்பாடு செய்தேன்.
ஆனால், குப்பைத் தொட்டியை வைப்பதற்கு முன்பு வரை அமைதியாக இருந்த அப்பகுதி, தொட்டி வைக்கப்பட்ட பின்புதான் பிரச்சினைக் களமாக மாறியுள்ளது. குப்பைகளைத் தொட்டியில் போடாமல் அதனருகிலேயே வீசிச் செல்வதும், குப்பைத்தொட்டி இருக்கும் பகுதியில் கழிவு நீரை ஓடவிட்டு, பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலுள்ள தொட்டி விரைவிலேயே சேதமடையக் காரணமாவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் எனது வார்டிலிருந்து நான் முகம் கொடுக்கும் பிரச்சினைகளில் பெரும்பகுதி இந்தக் குப்பைத் தொட்டி சார்ந்ததாகவே இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பலமுறை எடுத்துக்கூறியும் போதிய ஒத்துழைப்பே கிடைக்கவில்லை. எனவே, காயிதேமில்லத் நகரில் தேவைப்படும் இடத்தில் தற்போது அத்தொட்டியை மாற்றி வைத்துள்ளேன். அப்பகுதி மக்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.
முறையாக நடக்கும் ஒரு சிலர் இதனால் பாதிக்கப்பட்டாலும், எனக்கு வேறு வழி தெரியாததாலேயே இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. இதைத் தவிர எனக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.
படங்கள்:
Y.M.முஹம்மத் தம்பி
(AKM ஜுவல்லர்ஸ்) |