வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் அடுத்த 9 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்தார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
தகுதியுடைய நபர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் ஒருங்கிணைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. அடுத்த 9 மாதங்களிலோ அல்லது 2016-ஆம் ஆண்டு தொடக்கத்திலோ இந்தப் பணிகள் நிறைவடையும். ஆதார் - வாக்காளர் அட்டை விவரங்களை ஒருங்கிணைத்தால், ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் வழங்குவது, தவறான தகவல்கள் அச்சிடப்படுவது ஆகியவை தவிர்க்கப்படும்.
இதன் மூலம் வழக்கமாக வாக்காளர் அட்டை குறித்து எழும் 99 சதவீதப் புகார்களுக்கு வாய்ப்பிருக்காது. இந்தியாவில் மொத்தம் 84 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் 55 கோடி பேர் மட்டுமே தங்களது வாக்குகளைப் பதிவு செய்கின்றனர். மீதமுள்ளவர்கள், வேண்டுமென்றோ அல்லது எதேச்சையாகவோ தங்களது வாக்குரிமையைத் தவற விடுகின்றனர்.
வாக்களிப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். சரியான நபரை வாக்களித்துத் தேர்ந்தெடுப்பது நமது இன்றியமையாத பொறுப்பும் கூட.தேர்தலில் வாக்களிக்காத எவரும், அரசின் செயல்பாடுகளைக் குறை கூறுவது சரியல்ல. சரியான அரசை தேர்ந்தெடுக்காவிட்டால், அது நம்முடைய குறைதான்
என்று பிரம்மா பேசினார்.
தகவல்:
தினமணி |