நாடு முழுவதும் இன்று 66-வது குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கவர்னர் கே.ரோசய்யா காலை 7.58 மணிக்கு விமானப்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்துவர காரில் வந்திறங்கினார். காலை 8 மணிக்கு கவர்னர் ரோசய்யா, காந்தி சிலை முன்பு இருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் துவியது
அதைத் தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண- சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பு நடைபெற்றது.. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங் களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படும். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குவார். சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும்.
குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வசதியாக காந்தி சிலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பந்தல் போடப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் பி.தனபால், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், மேயர், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்கலைக்கழக துணை-வேந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
தினத்தந்தி
புகைப்படங்கள்:
தி இந்து |