இந்தியாவின் 66ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று காலை 08.30 மணிக்கு குடியரசு நாள் விழா நடைபெற்றது.
கொடியேற்றம்:
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சிகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
வாகன ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேசிய கொடியேற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய, அனைவரும் வழிமொழிந்தனர்.
வாழ்த்துரை:
நகர்மன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், நகராட்சி எழுத்தர் காளிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தலைமையுரை:
நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் தலைமையுரையாற்றினார்.
இரண்டாம் குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் 3 மாத காலத்தில் முழுமையாக முடிவடையும் என அவர் தனதுரையில் தெரிவித்தார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
இந்தியா உலகிலேயே தலைசிறந்த ஜனநாயக நாடு. இதைக் கருத்திற்கொண்டு, இன்று நம் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழாவில், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் நடைபெறும் இந்த குடியரசு நாள் விழா யாருடைய தனிப்பட்ட விழாவோ, தனி அமைப்பினரின் விழாவோ அல்ல. நம் அனைவருக்குமான இவ்விழாவில் நாம் அனைவரும் கலந்துகொண்டு, நம் தாய்நாட்டின் ஒற்றுமைக்கும். ஒருமைப்பாட்டிற்கும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.
அப்படிப்பட்ட இவ்விழாவில், வழமைக்கு மாற்றமாக இன்று - மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பெருவாரியான நகர்மன்ற உறுப்பினர்களே கலந்துகொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தேச ஒற்றுமைப் பாடல்:
பின்னர் அனைவரும் இணைந்து, மறைந்த கவிஞர் ‘காயல் பிறைக்கொடியான்’ எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன் இயற்றிய தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலைப் பாடினர்.
நிகழ்ச்சி நெறியாளர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெக்ஷ்மி, அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும், நகர்மன்றத் தலைவர் இனிப்பு வழங்கினார்.
வண்ணக் கோலங்கள்:
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, நகராட்சியின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பணிக்காக தற்காலிகமாக வருகை தந்துள்ள பெண் பணியாளர்கள் இணைந்து - விழா நடைபெற்ற வளாகம் முழுக்க பல வண்ணங்களில் கோலங்களை வரைந்து அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு (2014) காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |