அலுவல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள - தமிழக அரசு சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வலியுறுத்தலின் பேரில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை 08.00 மணியளவில் திடீரென வருகை தந்தார். அவருடன், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் திவாகரன், அதன் துணை இயக்குநர் டாக்டர் உமா, தமிழக சுகாதார திட்டப் பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிங்ஸ்டன் ஆகியோர் வந்திருந்தனர்.
அவர்களை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஃப்ரீ ஆகியோர் வரவேற்றனர்.
மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., அவற்றின் செயல்பாடுகள் குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து, சிகிச்சைக்கு வந்திருந்த புறநோயாளிகளிடமும் அவர் விசாரித்தறிந்தார்.
மருத்துவமனைக்கு நிரந்தர பொது மருத்துவர் - மகப்பேறு மருத்துவர் நியமனம், ஆளில்லாப் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் நியமனம்,
மருத்துவமனை வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவப் பிரிவுகள் அனைத்தையும் இணைக்கும் வகையிலான மேற்கூரை அமைத்தல்,
தமிழக அரசின் மூலம் காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு,
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு, அரசு மருத்துவமனையிலேயே கீமோதெரபி சேவை,
கோமான் ஜமாஅத் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இடத்தில், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டல்
உள்ளிட்ட கோரிக்கைகளை நகர்மன்றத் தலைவர், சுகாதாரத் துறை செயலரிடம் வழங்கினார்.
ஏற்கனவே, இவை குறித்து பல்வேறு தருணங்களில் தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விரைந்து பரிசீலித்து ஆவன செய்யுமாறும் அவரிடம் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
அரசு மருத்துவமனையின் அனைத்து வளாகங்களையும் இணைக்கும் வகையில் மேற்கூரையமைத்தல் தொடர்பான நகர்மன்றத் தலைவரின் கோரிக்கை அடிப்படையில், அதற்கான திட்ட செலவு மதிப்பீட்டை மாவட்ட சுகாதாரத் துறை ஆயத்தம் செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேர நெருக்கடியுடன் கூடிய பல்வேறு அலுவல்களுக்கிடையிலும், நகர்மன்றத் தலைவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாகவும், பெற்றுக்கொண்ட அனைத்துக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைக்கு, தான் அலுவலகம் சென்றதும் விரைந்து ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.
காயல்பட்டினம் மக்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “உணர்ச்சிப்பூர்வமானவர்கள்; மிகுந்த பாசமும், நெருக்கமும் காண்பிப்பவர்கள்” என்றார்.
நகர்மன்றத் தலைவரின் தந்தை பாளையம் இப்றாஹீம் குறித்துப் பேசிய அவர், “அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப் பணிகளை முன்னின்று செய்த அவர், எளிதில் மறக்க முடியாதவர்” என்றார்.
இந்நிகழ்வின்போது, அரசு மருத்துவமனை மருத்துவர் ஹேமலதா, ஆரம்ப சுகாதார நிலைய துணை ஆய்வாளர் சோமசுந்தரம், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், அரசு மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தமிழக சுகாதாரத் துறையின் செயலாளரான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., அரசுரத் துறையில் இணைந்த புதிதில் - 1990களில் ஆத்தூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டதிலிருந்து தனது அரசுப் பணியைத் துவக்கியவர். ஆத்தூரில் வெள்ள நிவாரணப் பணிகளை அரசு சார்பில் முனைப்புடன் செய்தவர்.
அக்காலகட்டத்தில், வினாயக சதுர்த்தி ஊர்வலம் காரணமாக காயல்பட்டினத்தில் பதட்டம் நீடித்தபோது, எந்தப் பிரச்சினையும் ஏற்படாவண்ணம் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு, இரு தரப்பினரும் அமைதியுடன் இயங்கிடச் செய்தவர்.
காயல்பட்டினத்தில் விபத்தில் இறந்த ஒருவரின் பிரேத பரிசோதனையின்போது ஏற்பட்ட பதட்டச் சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு சுமூகமாக முடித்து வைத்தவர். இந்நிகழ்வு குறித்து, நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் அவரிடம் கூறியபோது, அந்நேரத்தில் நடந்த நிகழ்வுகளை முழுமையாக நினைவுகூர்ந்து, தனது நினைவாற்றலை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழத்தினார்.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, அங்கு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய இவர், இறந்த பள்ளிக் குழந்தைகளின் தாய்மார்களுள் கருத்தடை செய்திருந்தோருக்கு மீண்டும் குழந்தை பெற தேவையான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தவர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |