இந்தியாவின் 66ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் நாளன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் இம்மாதம் 26ஆம் நாளன்று குடியரசு நாள் விழா நடைபெற்றது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
குடியரசு தினத்தன்று முஸ்லிம் விடுதலை தியாகிகளை போற்றிய துளிர்!
அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் வட்டத்தின் சார்பில் குடியரசு தினத்தன்று “இந்திய விடுதலை போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகத்தை போற்றும்” உரையங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக துளிர் வளாகத்தில் தேசிய கொடியை சிறப்பு அழைப்பாளர் இஸ்லாமிய எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் ஏற்றிவைத்தார். கொடியேற்றும் நிகழ்ச்சியில் துளிரின் குழந்தைகள், பெற்றோர்கள், நகரின் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கொடியேற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து துளிர் காணொளி கூடத்தில் உரையங்கம் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் நகர் மன்றத்தலைவர். நாச்சித்தம்பி, திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அறக்கட்டளையின் பொருளாளர் எச்.எம்.சேக், லண்டன் காயல் மன்றத்தின் பிரதிநிதி செய்யது முகம்மது மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாகுல் ஹமீது கிராஅத் ஒதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கொமந்தார் இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார். துளிர் நிறுவனர் வக்கீல்.அஹ்மத் அறிமுக உரையாற்றினார்.
பல்வேறு இஸ்லாமிய பத்திரிகைகளில் தமிழகத்தில் வாழ்ந்த மறைந்த முஸ்லிம் கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், பல்வேறு துறைகளில் தடம்பதித்த பெருத்தகைகளைப்பற்றி எழுதிவரும் முன்னாள் அஞ்சல்துறை உதவி கண்காணிப்பாளர் கடையநல்லூர் சேயன் இப்ராஹிம் இந்திய விடுதலை போரில் தியாகம் புரிந்த இஸ்லாமியர்களைப் பற்றி பல்வேறு வரலாற்று குறிப்புகளை சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தினார்.
சேயன் இப்ராஹிமுக்கு தமிழகத்தின் சிறந்த இஸ்லாமிய எழுத்தாளர்களை போற்றும் “பாவலர் சேகு அப்துல் காதர் எழுதுகோல் விருது” துளிரின் சார்பில் வழங்கப்பட்டது. இவ்விருதினை லண்டன் காயல் மன்றத்தின் பிரதிநிதி செய்யது அஹமது மரைக்கார் வழங்கினார்.
இந்திய விடுதலை போராட்ட தியாகி கொடிக்கால் சேக் அப்துல்லாவிற்கு “இந்திய விடுதலை தியாகிகளை போற்றும் வி.எம்.எஸ்.லெப்பை விளக்கு விருதை” துளிர் வழங்கியது. இவ்விருதினை வி.எம்.எஸ்.லெப்பையின் சகோதரர் வி.எம்.எஸ்.அமீன் வழங்கினார்.
இலக்கிய ஆர்வலர் காயல்.எஸ்.இ.அமானுல்லா பாவலர் அவர்களின் எழுத்தாற்றல், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றையும் தந்தை பெரியாருடன் அவருக்கு இருந்த தொடர்பையும் பேசியதோடு, நம் நகர்மன்றத்தின் மூலம் ஆற்றிய சேவைகளில்; நம் நகருக்கு குறிப்பாக பாவலர் பூங்கா, அன்றைய கடற்கரை பூங்கா, நமதூர் பைபாஸ் ரோடு ஆகியவற்றை ஏற்படுத்தியதை குறிப்பிட்டு பேசினார்.
விருது பெற்ற சேயன் இப்ராஹிமின் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் எழுத்துப்பணிகளையும் பாராட்டி பேசினார். அதுபோல வி.எம்.எஸ்.லெப்பைக்கு காங்கிரசுடன் இருந்த தொடர்பையும், ஹாங்காங்கில் அந்த காலத்திலேயே கால் பதித்த அவரின் பெருமையையும், காயல்பட்டினம், ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி அமைந்திட பல ஏக்கர் நிலத்தை தானமாக தந்ததையும், நகர் மன்றத் தலைவராக இருந்து காயல்பட்டினத்திற்கு ஆற்றிய சேவைகளையும், அவர் பெயரில் அமைந்த விருதை இந்திய விடுதலை போராட்ட தியாகியும், சிறந்த சிந்தனையாளரும், சமூகப் பேராளியுமான கொடிக்கால் சேக் அப்துல்லா பெறுவது மிகவும் பொருத்தமானது என்றும் பாராட்டினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கொடிக்கால் சேக் அப்துல்லா பேசும் போது தனது சிறுவயதில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த விடுதலை போராட்ட தியாகிகளுடன் தனக்கு இருந்த தொடர்பையும், அப்போழுதிருந்தே தனக்கு விடுதலை போராட்டத்திலிருந்த ஈடுபாட்டையும் குறிப்பிட்டு கூறினார்.
தான் இளமை காலத்தில் விவேகானந்த மடத்தில் இருந்ததையும், பின்பு நாஸ்தீக கொள்கைகளில் ஈடுபாடு கொண்டதையும், அதன் பின்பு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதையும் தனது உரையில் பதிவு செய்தார். இந்த நாட்டின் மிகத்தொன்மையான இனங்களில் ஒன்றான முஸ்லிம்கள் இந்நாட்டுக்காகத் தம்மாலான அனைத்து உதவி, ஒத்தாசைகளையும் வரலாறு நெடுகிலும் செய்து வந்திருக்கின்றார்கள். நமது தாய் நாட்டை பிரிட்ஷ்காரர்களிடமிருந்து மீட்டெடுத்த சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் கணிசமான பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இதற்கு கடந்த கால வரலாறுகள் சான்றளிக்கின்றன. இந்நிலையில் இப்படிப்பட்ட முஸ்லிம்கள் மீது அநியாமாக கட்டவிழ்த்து விடப்படும்; தீவிரவாத முத்திரை என்பது முஸ்லிம்களை பற்றிய தவறான எண்ணத்தை பிற சமூகத்தினரிடம் தோற்றுவிக்கும் என்பதை குறிப்பிட்ட தரப்பினர் உரை வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் பிற சமூகங்களோடு எல்லா காலங்களிலும் ஒற்றுமையோடு வாழ்ந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. ஒரு நாட்டின் மைய நீரோட்டத்தில் கலந்தோடுவது தனிமைப்படாதிருக்க மிகவும் முக்கியம். ஒரு சமூகம் ஒருபோதும் தன்னை நாட்டின் பொதுப் போக்கிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளும் போது ஏனைய சமூகங்களின் சந்தேகத்திற்கும், சாடுதலுக்கும் அது உட்பட வேண்டி ஏற்படுகிறது. எனவே முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் கலந்து பழக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தேசிய நீரோட்டத்தில் கலந்திட வேண்டும் என்றும் தனிமைப்படக்கூடாது என்றும் கூறினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |