காயல்பட்டினம் நகராட்சியில், இம்மாதம் 26ஆம் நாளன்று (நேற்று) காலையில் குடியரசு நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுப் புழுக்களைச் சாப்பிடும் மீன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல் நோய்களுக்கு எதிராக நகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், வீடுகளில் பயன்பாடற்ற பாத்திரங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும், நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சியிலிருந்து வரும் பணியாளர்களை விரட்டாமல், முழு ஒத்துழைப்பளிக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், நகர்மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு, நோய்க்கிருமிகள் மற்றும் கொசுப் புழுக்களைச் சாப்பிடும் மீன்களை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ஆணையர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர் வழங்கினர்.
மீன்கள் தேவைப்படுவோர், வேலை நேரங்களில் நகராட்சி அலுவலகத்தில் வந்து கேட்டுப் பெறலாம் என சுகாதார ஆய்வாளர் அப்போது தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |