தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்தது. ஆட்சியர் ரவிகுமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்து ரூ.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 66வது குடியரசு தின விழா நடந்தது. ஆட்சியர் எம்.ரவி குமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், சுதந்திரப்போராட்ட தியாகிகள் 22 பேரை கௌரவித்தார். அதன்பின் காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றி 40 பேருக்கு அண்ணா பதக்கங்களையும், 44 பேருக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுசேமிப்பு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வருவாயத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை போன்ற துறைகள் மூலம் 83 பயணாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 5ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமாட்சி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித. தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.பி.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளின் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெண் கல்வி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான பாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரை முன்னிலை வகித்தார். விழாவில், தூத்துக்குடி நாடாளுமன் உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, சார் ஆட்சியர் கோபால சுந்தர் ராஜ், ஏஎஸ்பிகள் முரளி ரம்பா, அருண் சக்திகுமார், திட்ட அலுவலர் வீரபத்திரன், சுகாதார துறை இணை இயக்குநர் உமா, ஆதி திராவிடர் நல அலுவலர் கமலம், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், தாசில்தார் இளங்கோ, மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், உதவி அலுவலர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
www.tutyonline.com |