புகழ்பெற்ற தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும் - பொதுநல அமைப்புகளையும் உருவாக்கியவரும், சேனா ஆனா (செ.அ.) என பரவலாக அழைக்கப்பட்டவரும், இ.டீ.ஏ. குழும நிறுவனங்களின் துணைத்தலைவரும் - கீழக்கரையைச் சேர்ந்தவருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் என்ற புகாரீ செய்யித் அப்துர் ரஹ்மான் இம்மாதம் 07ஆம் நாள் புதன்கிழமையன்று 17.30 மணியளவில் சென்னையில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா, மறுநாள் வியாழக்கிழமை 11.30 மணியளவில், சென்னையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, 13.15 மணியளவில், சென்னை - வண்டலூர் கிரஸண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு, பள்ளியின் முன்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் சார்பில், 31.01.2015 அன்று, ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் இப்றாஹீம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். இந்திய முஸ்லிம் சங்க தலைவர் ஹமீத் ஜலால் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அறங்காவலர் குழு உறுப்பினர் சஈதுத்தீன், தமிழ் கலாச்சார சங்கத்தைச் சேர்ந்த நாச்சியப்பன், கவ்லூன் பள்ளியின் தலைமை இமாம் முஃப்தீ முஹம்மத் அர்ஷத், ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், எஸ்.எம்.யூனுஸ் உள்ளிட்டோரடங்கிய பிரமுகர்கள் - பொதுநலப் பணிகளில் மறைந்த அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் அவர்களது ஈடுபாடு, தன்னலமற்ற சேவைகள், குறிப்பாக ஹாங்காங் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள், கவ்லூன் பள்ளி கட்டப்பட்டபோது, அதன் நிதி திரட்டும் குழு தலைவராக இருந்து ஆற்றிய சேவைகள் குறித்து புகழ்ந்து பேசியதுடன், அன்னாரின் மண்ணறை - மறுமை நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தனர்.
கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. ஹாங்காங் வாழ் தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
K.M.செய்யித் அஹ்மத்
செயலாளர் - இந்திய முஸ்லிம் சங்கம், ஹாங்காங்.
ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |