காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், சிவன்கோயில் தெருவிலுள்ள - தைக்கா பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று 15.30 மணியளவில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் டி.ஆரூன் பொன்ராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனை அலுவலர்களான சு.சிதம்பரம், ந.சம்பந்தன், து.மாரியப்பன், 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், டெங்கு காய்ச்சலின் தன்மை மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்ற 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 15, 16, 17ஆவது வார்டுகளின் பிரமுகர்கள், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியையர், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான - 15ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால் நன்றி கூறினார்.
அனைவருக்கும் காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் முதல் கோப்பையை வழங்க, பள்ளி தலைமையாசிரியர் அதனைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மேடையில் அங்கம் வகித்தோரால் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |