காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பிலான - அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் கூட்டம் சார்பில் நடத்தப்பட்ட இயற்கைச் சூழலியல் கருத்தரங்கில், சிறந்த இயற்கை ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து, துளிர் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
துளிர் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வரும் அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் கூட்டம் சார்பில் 18.01.2015 அன்று ஞாயிறு காலை துளிர் வளாகத்தில் “இயற்கை சூழலியல் கருத்தரங்கம்” நடைபெற்றது.
இக்கருத்தரங்க நிகழ்விற்கு லண்டன் டாக்டர் எஸ்.டி..செய்யது அகமது தலைமை வகித்தார். நெல்லை வழக்கறிஞர் ஹூசைன், ஆலந்தூர் கவிஞர் மோகன ரங்கன், குடும்ப நல மருந்துவர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஃபிழ். முகம்மது இப்ராஹிம் கிராஅத் ஒதிட, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்க நிகழ்வுகள் துவங்கின. துளிர் நிறுவனர் வக்கீல் அஹ்மத் வரவேற்புரையுடன் கருத்தரங்க நிகழ்ச்சி பற்றி அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முதலவதாக நகரின் இயற்கை ஆர்வலர்கள் இருவர் துளிர் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டப்பட்டனர்.
காயலபட்டினத்தில் இயற்கை பொருள் அங்காடியை நடத்தும் என்.எஸ்.இ.மஹ்மூது, “காயல்பட்டினத்தின் சிறந்த இயற்கை வாழ்நெறியாளர்” என நினைவு கேடயம் வழங்கி பாராட்டப்பட்டார்.
”காயல்பட்டினத்தின் சாதனை செம்பருத்தி விவசாயி என பாராட்டு கேடயம் வழங்கி முஹம்மது இப்ராஹிம் கவுரவிக்கப்பட்டார்.
சிறப்பு விருத்தினர்கள் இவ்விருவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தனர்.
என்.எஸ்.இ. மஹ்மூது குறித்து - கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் பாராட்டிப் பேசினார்.
அவர் இயற்கை விஞ்ஞானி நம்வாழ்வாரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்பவர் என்றும், இரசாயன உரங்கள் கலக்காத இயற்கை உணவுப் பொருட்களை விற்பனை செய்வதில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே முதலவாதாக அதற்கென அங்காடியை காயல்பட்டினத்தில் தொடங்கி நடத்தி வரும் முன்னோடி என்றும் இயற்கை முறையில் வாழ்ந்திட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் என்றும் புகழ்ந்துரைத்தார்.
செம்பருத்தி சாகுபடி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் முகம்மது இப்ராஹீமை ஜெயந்தி ஸ்வீட்ஸ் மாணிக்கவாசகம் பாராட்டிப் பேசினார்.
காயல்பட்டினம் மண் இயற்கைக்கும், சகோதரத்துவத்துக்கும் எப்போதும் மதிப்பளிக்கும் மண் என்றும், நாடறிந்த வணிகர் பெருமக்கள் வாழும் இந்நகரில் ஒரு இளம் விவசாயி செம்பருத்தியை சாகுபடி செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் சாதனை என்றும், இழந்துவிட்ட நம் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையாக முகம்மது இப்ராஹிம் பரிணமித்து வருவதாகவும் அவரால் காயல்பட்டினத்திற்கு பெருமை என்றும் குறிப்பிட்டார்.
இயற்கை சூழலியல் கருத்தரங்கத்தை துளிர் நடத்துவதை நெல்லை வழக்கறிஞர் ஹுசைன் பாராட்டிப் பேசினார்.
அவர் பேசும் போது இயற்கை சூழலிருந்து காக்க முஸ்லீம்கள் முன் வரிசையில் நிற்க வேண்டும் என்றும் இறைவனால் படைக்கப்பட்ட இப்பூவுலகை நம் வருங்கால சந்ததிக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் விட்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் இயற்கையை பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களையும் அவர் எடுத்துக்காட்டினார்.
இக்கருத்தரங்க ஏற்பாட்டாளர்களை காயல்பட்டினம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளியின் ஒய்வு பெற்ற தமிழாசிரியர் குமரகுரு வாழ்த்திப் பேசினார்.
கருத்தரங்கத்தில் சகல தரப்பினரும் சாதி மதம் கடந்து இயற்கையைப் பாதுகாக்க ஒன்றிணைந்திருப்பது காயல்பட்டினத்தின் நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும், எல்.கே.லெப்பை தம்பி, எஸ்.ஒ..ஹபீபு, ஏ.கே.எம் அப்துல் காதர் உள்ளிட்ட காயல்பட்டினத்தின் வாழ்ந்து மறைந்த பெருந்தகைகளின் சேவைகளை நினைவு கூர்ந்தும் அனைவரும் மனம் நெகிழ அவர் கூறினார்.
கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் கே.வி.கபீர் வாழ்த்துரையாற்றினார்.
நமது நகரில் இது போன்ற சேவைகள் செழிக்க துளிர் இன்னும் வளர வேண்டும் தளைக்க வேண்டும் என்றும், இது போன்று பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளை அறிஞர் பெருமக்கள் பேராசிரியர்களை கொண்டு துளிர் நடத்தி வருவதாகவும், இது போன்ற கருத்தரங்குகளில் நமது ஊர் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை சிறப்பு பேச்சாளர் முனைவர் மு.அப்துல் சமது அவர்களை இலக்கிய ஆர்வலர் அமானுல்லாஹ் அறிமுகப்படுத்திப் பேசினார்.
அவர் பேசும் போது சிறப்பு பேச்சாளர் தமிழகம் அறிந்த மிகச்சிறந்த இஸ்லாமிய இலக்கிய சொற்பொழிவாளர் என்றும், இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தென்னகத்தின் பழப்பெரும் இஸ்லாமிய கலாச்சார நகரமான காயல்பட்டினத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வு மையம், நூலகம், இஸ்லாமிய வரலாற்று அருங்காட்சியகம் உள்ளிட்ட ஒரு தனியான அமைப்பு அதற்கான அனைத்து கட்டமைப்புகளுடன் உருவாக்கப்படவேண்டும் என்றும், அதற்கு துளிரின் வழக்கறிஞர் அஹ்மத் போன்றோர் முன்முயற்சி செய்ய வேண்டும் என்றும், அதற்கு நமது நகரின் பெருத்தகைகள் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, சிறப்பு பேச்சாளர் முனைவர் மு.அப்துல் சமது உரையாற்றினார்.
தனது பேச்சின் துவக்கத்தின் காயல்பட்டினம் பல வள்ளல்களும், புலவர்களும், சமுக பேச்சாளர்களும் வாழ்ந்த - வாழ்கின்ற ஊர் என்றும், இந்த நகரத்தில் தனக்குப் பேசக் கிடைத்த வாய்ப்புக்கு ஏக இறைவனுக்கு நன்றி என்று கூறிப்பிட்டார். வல்ல இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியை இயற்கையை கெடுக்கவோ, அழிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் இந்த பூவுலகில் வாழும் உரிமையை மட்டும் தான் மனிதர்களுக்கு இறைவன் தந்துள்ளான் என்றும் குறிப்பிட்டார். பெருமானின் அறிவுரையை ஏற்று மதினாவாலில் ஒரு யூதனின் இடத்தை கிரையம் வாங்கி மதினாவார்களின் பயன்பாட்டுக்கு வஃக்ப் செய்த உஸ்மான் (ரழி) அவர்களின் செயலைச் சூட்டிக்காட்டி தண்ணீர் அனைவருக்கும் சொந்தம் என்று அன்றே பறைசாற்றிய மார்க்கம் இஸ்லாம் என்று கூறினார்.
செல்போன் டவர்களின் மின் அதிர் அலைகளால் தேனீக்கள் செத்து மடிவதால் திருக்குர்ஆன் சூட்டிக்காட்டிய அருமருந்தான தேன் இனி மருந்துக்குக் கூட கிடைக்காத சூழல் உருவாகிவதை சுட்டிக்காட்டினார். சிட்டுக்குருவியும், பட்டாம்பூச்சியும், காகமும் மறைந்து அரிதாகிப் போய்விட்டதாகக் கவலையோடு குறிப்பிட்டார். இயற்கை விவசாயத்தை மறந்து செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் பழங்கள் காய்கறிகளால் உடலுக்கு ஏற்படும் கேடுகளை குறிப்பிட்டார். திருக்குர்ஆனில் இருந்தும், ஹதீதுகளிலிருந்து பல்வேறு இயற்கை சார்ந்த விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். பார்வையாளர்கள் அனைவரும் ஆர்வமுடன் வியந்து அவரது உரையை கேட்டுணர்ந்தனர்.
கருத்தரங்கம் கேட்க வந்திருந்த சுற்றுக்சூழல் மாணவர் அமைப்பின் பிரதிநிதி மதன் இறுதியில் பேசினார்.
அவர் இஸ்லாமியார்கள் மதம் சார்ந்த விஷயங்களுக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கும்தான் முக்கியத்துவம் தருபவர்கள் என்று தான் தவறாக நினைத்து வைத்திருந்ததாகவும், இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் தனக்கு அந்த எண்ணம் மாறிப்போனது என்றும், இயற்கைச் சூழலியலுக்கு இஸ்லாமும், குர்ஆனும் இத்தனை முக்கியத்துவம் தந்துள்ளதை எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார். துளிரிருடன் தொடர்ந்து செயல்பட முன்வருவதாகவும் தெரிவித்தனர்.
கண்ணாடி ஆலிம் குடும்பத்தினரின் சார்பாக கவிமகன் காதர் வாங்கி வந்த மரக் கன்றுகள் கருத்தரங்கிற்கு வந்திருந்தோர் அனைவருக்கும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மேடையில் அங்கம் வகித்தோருக்கு சால்வை அணிவித்தும், சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கியும் கண்ணியப்படுத்தப்பட்டது.
இறுதியில் ஒடக்கரை ஞானசேகரன் அனைவருக்கு நன்றி கூறும் போது துளிர் “இயற்கையின் மார்க்கம் இஸ்லாம் என தலைப்பிட்டு கருத்தரங்கம் நடத்துவது அனைத்து மதத்தினருக்கும் பயனுள்ள பல செய்திகளை சொல்லியது. இதுபோன்ற கருத்தரங்களை துளிர் பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், இயற்கை ஆர்வலர்கள், நகரப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |