திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது - மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பாக அறக்கட்டளை. இவ்வமைப்பின் சார்பில் கன்னியாகுமரி முதல் இராமநாதபுரம் வரை கடலோரப் பகுதிகளில் உள்ள ப்ளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில் இக்குழுவினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் வழிகாட்டலில் நடைபெற்ற இப்பணியில், 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணியும் பங்கேற்றார்.
எம்.எஸ்.இளங்கோ, சுரேஷ் பாபு, செல்வி, மாசான செல்வி, வசந்தி, ஸ்வாதி ஆகிய பொறுப்பாளர்களின் வழிகாட்டலில், பள்ளி மாணவ-மாணவியரைக் கொண்ட குழு கடற்கரை மணற்பரப்பு முழுவதிலும் தேங்கிக் கிடந்த ப்ளாஸ்டிக் மற்றும் காகிதக் கழிவுகளைச் சேகரித்து எடுத்துச் சென்றனர்.
உலகில் இயற்கைச் சூழல், பருவ நிலை சீராக இருப்பதற்கு, கடலில் உள்ள பவளப் பாறைகளும், கடல் வாழ் உயிரினங்களும் பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என்றும், தற்காலத்தில் பெரும்பாலான மனித சமூகத்தால் வீசியெறியப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகள் காரணமாக அவற்றின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக அறக்கட்டளை கவலை கொண்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே கடலோரப் பகுதிகளில் பரந்து கிடக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து அகற்றும் பணியைச் செய்வதாகவும், என்றோ நடக்கும் இந்த துப்புரவுப் பணிகளால் நோக்கம் முழுமையடையாது என்றும், கடற்கரையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் இந்த மணற்பரப்பை தம் சொந்த வீடு போல துப்புரவுடன் பராமரிக்க முடிவெடுத்தால் மட்டுமே இந்நோக்கம் முழு வெற்றியடையும் என்றும் குழுவினர் தெரிவித்தனர். |