பிப்ரவரி 01ஆம் நாளன்று (இன்று) தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இதனையொட்டி, அந்நாளில் காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் முதற்கட்டமாக குப்பைகளைச் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.
இரண்டாம் கட்ட குப்பை சேகரிப்புப் பணி இன்று அதிகாலை துவங்கி காலை 10.00 மணி வரை நடைபெற்றது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் ஒருங்கிணைப்பில், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி மேற்பார்வையில், நகராட்சியில் மொத்தமுள்ள 28 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர்கள் என மொத்தம் 40 பணியாளர்கள் இணைந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்டமாக குப்பைகளைச் சேகரித்து வந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த குப்பை சேகரிப்புப் பணி இத்துடன் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்ததாக - நகரின் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் வளர வழிவகுக்கும் - தேவையற்ற டயர்கள், தேங்காய் ஓடுகள் (சிரட்டை), பயன்படுத்தப்பட்ட கோப்பைகளை அவர்கள் தனியாகச் சேகரித்து எடுத்து வந்திருந்தனர். நகராட்சி மைதானத்தில் அவை வகைப்படுத்தி பிரித்தெடுக்கப்பட்டது. 15ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால் இதன்போது உடனிருந்தார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |