காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுக்காக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், அண்ணா பல்கலைக்கழக உதவியினை நாடியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் ஆகியவற்றின் தகவல்கள் நாங்கள் பதவிக்கு வந்த புதிதில் - எங்களுக்கு உட்பட - பரவலாக யாருக்கும் தெரியாது. ஒரு சிலர் மட்டும் அறிந்திருந்த அந்த விபரங்கள் இன்று பொது மக்களிடம் பரவலாக சென்றுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே. அந்த இடங்களை பாதுகாக்க இதுவே தேவையான முதல் விஷயமாகும்.
இறைவன் நாடினால் - எங்கள் பதவிக்காலம் முடிவதற்குள், அந்த இடங்கள் அனைத்தையும் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க, அவ்விடங்களை சுற்றி வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி செய்வேன்.
நவம்பர் மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் இவ்விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள, தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்திருந்தேன்.
தீர்மானம்
--------
காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் உள்ள அனைத்து நகராட்சிக்கு/அரசுக்கு பாத்தியப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நவீன தொழில் நுட்பங்களின் (GIS, GPS Based Land Survey) உதவிக்கொண்டு கண்டறிந்து, அவற்றின் மேல் நடவடிக்கை எடுக்க தோதுவாக ஆய்வறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோர மன்றம் அனுமதிக்கு மேலே காணும் தீர்மானத்திற்கு மன்றத்தின் ஒப்புதலும் கிடைத்தது.
சென்னையில் இந்த வாரம் - இது குறித்து உதவிட, அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் எம்.ராஜாராம் அவர்களுக்கு கோரிக்கை கொடுத்தேன்.
அதனை தொடர்ந்து - செயற்கைக்கோள் துணைக்கொண்டு, நிலங்களை ஆய்வு செய்யும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறையான - INSTITUTE OF REMOTE SENSING என்ற துறையின் இயக்குனர் முனைவர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து, நகராட்சியின் தேவைகள் குறித்து விளக்கினேன். தங்கள் துறையால் முடிந்த அனைத்து உதவிகளையும் நகராட்சிக்கு செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் பதிவு செய்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |