நகர்நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளித்திடுவதென, SDPI காயல்பட்டினம் நகர கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் எஸ்.அப்துர்ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளைக் கூட்டம் இம்மாதம் 05ஆம் நாள் வியாழக்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் எஸ்.எம்.சேக் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட - மழையினால் பழுதடைந்த சாலைகளைச் சீரமைத்தல்
(2) காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்தல்
(3) வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் - அரசு விதிகளுக்கெதிராக நடைபெறும் மதுக்கடைகளை அகற்றல்
(4) சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி, அவ்விடங்களில் புதிய மின் கம்பங்களை அமைத்தல்
(5) காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் பின்புறம் குப்பை கொட்டுவதால் ஏற்படும் தீமைகளைக் கருத்திற்கொண்டு, அதுகுறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ளல்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்புடைய அலுவலகங்களில் மனு அளிப்பதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நகர செயலாளர் எஸ்.அப்துர்ரஹ்மான், மருத்துவப் பிரிவு எஸ்.எம்.கே.முஹ்யித்தீன் ஆகியோர் இக்கூட்டத்தில் முன்னிலை வகிக்க, மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் ஷேக் அஷ்ரஃப் ஃபைஜீ சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார். கட்சி உறுப்பினர்களும் கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.K.இம்ரான்
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |