இக்ராஃ கல்விச் சங்கம் மூலம், இரண்டு மாணவர்களின் முழுக் கல்விச் செலவினத்தை ஏற்றிடவும், நலத்திட்டங்களுக்காக ரூபாய் 20 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்தும், ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், ஜெய்ப்பூரிலுள்ள பிஸ்மி ஜெம்ஸ் புதிய அலுவலகத்தில், இம்மாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 12.00 மணியளவில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஷெய்க் அலீ நுஸ்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் தலைமையுரையாற்றினார்.
மன்றச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். கடந்த ஓராண்டில் மன்றம் ஆற்றிய பணிகளையும், வருங்கால செயல்திட்டங்களையும் அவர் விளக்கிப் பேசினார்.
மன்ற செயற்குழு உறுப்பினர்களான அலாவுத்தீன், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ ஆகியோர் கருத்துரையாற்றினர்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட - மார்ச் 15, 2015 வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கை சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில், இக்கூட்டம் அதற்கு ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 2 - நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்காக ரூபாய் 15 ஆயிரமும், ஷிஃபா மூலம் மருத்துவ சிகிக்சைக்கான உதவியாக நோயாளி ஒருவருக்கு ரூபாய் 5 ஆயிரமும் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்து தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - இரண்டு மாணவர்களின் முழு கல்விச் செலவினங்கள் ஏற்பு:
இக்ராஃ கல்விச் சங்கம் மூலம், நகரின் ஏழை மாணவர்கள் இருவருக்கு உயர்கல்வி பயில்வதற்கான முழுக் கல்விச் செலவினத்தையும் ஏற்றிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - தொழில் செய்ய உதவி:
சுய தொழில் செய்ய விரும்பி, உதவி கேட்டு விண்ணப்பித்துள்ள ஒருவருக்கு உதவிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் எம்.ஐ.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, அபுல்காஸிம் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
லுஹ்ர் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக - கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களரி சாப்பாடு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர் நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
B.M.லுக்மான் மவ்லானா
துணைச் செயலாளர் - ஜக்வா
ஜக்வா அமைப்பின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |