இராமநாதபுரம் மாவட்டம் - கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவில், அக்கல்லூரியில் பயின்ற - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவியர் இருவரின் சாதனைகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்லூரியின் 27ஆம் ஆண்டு விழா, இம்மாதம் 14ஆம் நாள் சனிக்கிழமை மாலையில், தமிழ்நாடு காவல்துறையின் மதுரை சரக ஐ.ஜி. அபய்குமார் சிங் ஐ.பீ.எஸ். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்லூரி வளாகத்தில், கல்லூரி முதல்வர் சுமய்யா தாவூத், சீதக்காதி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர்களான ஆரிஃப் ரஹ்மான், ஃகாலித் புகாரீ, அஹ்மத் புகாரீ, குர்ரத் முஸத்திக், ஷரீஃபா அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஹஸன் அலீ மற்றும் பிரமுகர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் துவக்க அமர்வில், கல்லூரியின் நிறுவனர் மறைந்த அல்ஹாஜ் பி.எஸ்.ஏ.அப்துல் ரஹ்மான் அவர்களது சேவைகளை நினைவுகூர்ந்து, இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா உரையாற்றினார்.
இறுதியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. 2014 - 2015ஆம் ஆண்டு பருவத்தில், கல்லூரியின் சிறந்த மாணவிக்கான விருதை, கல்லூரியில் பி.எஸ்ஸி. நியூட்ரிஷன் & டயடிடிடக்ஸ் பிரிவில் பயிலும் - காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த முஹம்மத் லெப்பை – சாரா உம்மாள் தம்பதியின் மூத்த மகள் எம்.எல்.ஜீனத் முனவ்வரா பெற்றார்.
அதுபோல, பி.எஸ்ஸி. கணிதம் பாடப்பரிவில், முதலிடம் பெற்றதற்கான விருதை, காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த ஸாலிஹ் - சித்தி கதீஜா தம்பதியின் மகள் ரஃபீக்கா பெற்றார். விருதுகளை சிறப்பு விருந்தினரான ஐ.ஜி. அபய் குமார் சிங் ஐ.பீ.எஸ். வழங்கினார்.
நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. |