DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மார்ச் 17 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கு, தொடர்ந்து ஜூலை 10, 2014, ஆகஸ்ட் 28, 2014, நவம்பர் 13, 2014, டிசம்பர் 2, 2014, ஜனவரி 29, 2015, பிப்ரவரி 25, 2015 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது.
ஆறு எதிர் மனுதாரர்களில், DCW நிறுவனம், தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், DCW தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயார் செய்த இரு நிறுவனங்களில் ஒன்றான PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஆகியோர் பதில் தாக்கல் செய்திருந்தனர்.
பிப்ரவரி 25, 2015 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது - மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் DCW நிறுவனத்திற்கு ஆவணங்கள் தயாரித்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனமான CHOLAMANDALAM MS RISK SERVICES LTD நிறுவனம் சார்பாக பதில்கள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பதில்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவ்விரு மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், KEPA அமைப்பின் வழக்கறிஞருக்கு அவற்றினை வழங்கவில்லை. வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு மார்ச் 17 அன்று வர இருந்த சூழலில், மார்ச் 16 அன்றே - பதில்கள், KEPA அமைப்பின் வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டது.
மார்ச் 17, 2015 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, காலதாமதமாக இரு எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் - பதில்களை தம்மிடம் தந்ததை சுட்டிக்காட்டிய KEPA வழக்கறிஞர் டாக்டர் வி.சுரேஷ், ஆறு எதிர் மனுதாரர்களின் பதில்களுக்கு - இணைப்பு பதில்களை (REJOINDER) சமர்ப்பிக்க மூன்று வாரம் கால அவகாசம் கோரினார்.
இதனை தொடர்ந்து, நீதிபதி - வழக்கினை, மே 13க்கு ஒத்தி வைத்தார்.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு, CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 10:30 am / 24.03.2015] |