இயற்கையான வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டிடவும், வீடுகளிலேயே மாடித்தோட்டம் அமைத்துப் பயன் பெற்றிட மகளிருக்கு விழிப்புணர்வூட்டவும் சிறப்பு செயல்திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்திட கத்தர் காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 72ஆவது செயற்குழுக் கூட்டம், கத்தர் பர்வா சிட்டி பார்க்கில், இம்மாதம் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, கே.எம்.எஸ்.மீரான் கிராஅத்துடன் துவங்கியது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
2015ஆம் ஆண்டு பருவத்திற்கான - மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு நிதியொதுக்கீடு செய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ரூபாய் 5 லட்சம் தொகையை நடப்பாண்டு நலத்திட்டப் பணிகளுக்காக நிதியொதுக்கீடு செய்திட ஒப்புதல் தருமாறு மன்றப் பொருளாளர் அஸ்லம் கேட்டுக்கொண்டார்.
இந்நிதி - கல்வி, மருத்துவம், அவசர கால நிதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட செயல்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் வலியுறுத்தினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, அதற்கு கூட்டம் ஒப்புதலளித்தது. நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - நடப்பாண்டு நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
நடப்பு 2015ஆம் ஆண்டு பருவத்தில் மன்றத்தின் நகர்நல செயல்திட்டங்களுக்காக ரூபாய் 5 லட்சம் தொகையை நிதியொதுக்கீடு செய்யவும், அதை கல்வி, மருத்துவம், அவசர காலத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட செயல்திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்திடவும் இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 2 - மாணவர்களுக்கான திறனாய்வு நிகழ்ச்சிகள்:
நகர மாணவர்களுக்கு, அவர்களுக்குள் புதைந்திருக்கும் திறமைகளை அவர்கள் அறிந்துணர்ந்து செயல்படச் செய்திடும் பொருட்டு, திறனாய்வு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, அது குறித்த முழு விபரத்தைச் சேகரித்துத் தர - கத்தீப் மாமுனா லெப்பை அவர்களிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
அதுபோல, ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன பயிலலாம் என்பது குறித்து வழிகாட்டவும், குறைவான மதிப்பெண்கள் பெற்ற மற்றும் தேர்ச்சியைத் தவற விட்ட மாணவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டலாம் என்பது பற்றியும் தேவையான விபரங்களைச் சேகரித்து அளித்திட, எம்.என்.சுலைமான் அவர்களிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
தீர்மானம் 3 - வாழ்வியல், மாடித்தோட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:
தற்கால நவீன உலகில், பொதுமக்கள் இயற்கையான வாழ்வியல் நெறிகளைத் தொலைத்து வருவது குறித்து இக்கூட்டம் கவலை தெரிவிப்பதோடு, முறையான வாழ்வியல் விழிப்புணர்வு செயல்திட்டங்களை அவ்வப்போது நகரில் செய்திடவும் தீர்மானிக்கிறது.
அதன் முதற்கட்டமாக, ஹீலர் பாஸ்கர் அவர்களை காயல்பட்டினம் வரவழைத்து, வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. நிகழ்வு நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அதுபோல, நகர மகளிர் தம் நேரங்களை வீணாக்காமல், தமது இல்லங்களிலேயே மாடித் தோட்டங்களை அமைத்து, தம் வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடத் தேவையான பயிற்சிகளையும், தேவையான விதை, செடி உள்ளிட்டவற்றையும் வழங்க சிறப்பு செயல்திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்விரு அம்சங்கள் குறித்தும், மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், எழுத்தாளர் சாளை பஷீர் ஆகியோரின் முறையான ஆலோசனைகளைப் பெற்று, அதனடிப்படையில் செயல்திட்டத்தை வடிவமைத்திடவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4 - துளிருக்கு உதவி:
வழமை போல, நடப்பாண்டும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி நலனுக்காக ரூபாய் 10 ஆயிரம் தொகையை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த (23ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் நாளன்று நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. நேரம், நிகழ்விடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தகுந்த வேலைவாய்ப்பு தேடி கத்தருக்கு வருகை தந்துள்ள - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த அஹ்மத் முஹ்யித்தீன் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அவருக்கான சரியான வேலைவாய்ப்பு அமைந்திட மன்ற அங்கத்தினர் முழு ஒத்துழைப்பளிக்குமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், ஹாஃபிழ் நூஹ் ஸாஹிப் துஆ இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில், மன்ற செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
கத்தரிலிருந்து...
M.N.முஹம்மத் சுலைமான் மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (71ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |