காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைக்காக, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை - கே.எம்.டீ. மருத்துவமனை இணைந்து, “மருத்துவ நிவாரணத் திட்டம் - Medical Relief Scheme (MRS) எனும் பெயரில் சலுகை அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இவ்விரு நிறுவனங்களுக்கிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இம்மாதம் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை பொருளாளர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், அறங்காவலர்களான வி.ஐ.புகாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, பைத்துல்மால் மேலாளர்,
கே.எம்.டீ. மருத்துவமனை சார்பில் அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் ஆகியோர் முன்னிலையில் நிறைவேறியது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த MRS சலுகை அட்டைகள், காயல்பட்டினத்திலுள்ள - தகுதியான 25 குடும்பங்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளன. ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் ஓர் அட்டையின் கீழ் அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவர் - ஆண்டொன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை மருத்துவ சிகிச்சை செலவினங்களில் பயன்பெறலாம் என்றும்,
ஒவ்வொரு சிகிச்சையின்போதும் ஆகும் மருத்துவ செலவினத்தில் 25 சதவிகிதத்தை MRS அட்டையைப் பயன்படுத்துவோரும், கே.எம்.டீ. மருத்துவமனை 25 சதவிகிதத்தையும், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை 50 சதவிகிதத்தையும் செலுத்துவர் என்றும் வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |