தமிழகத்தில் தொடர்ந்து 5-வது ஆண்டாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி சாதனங்கள், கொசு வலைகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செல்போன், எல்ஈடி பல்பு, மோட்டார் பம்பு போன்றவற்றுக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், வரும் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,616 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். 89 பக்கங்கள் கொண்ட உரையை மதியம் 12.19 மணிக்கு (2 மணி 19 நிமிடம்) நிறைவு செய்தார். கடந்த 2011-ல் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து 5-வது ஆண்டாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசின் புதிய நிதிப்பகிர்வு முறையால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் ரூ.35 ஆயிரத்து 485 கோடி அளவுக்கு நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று கவலை தெரிவித்தார். நிதிச்சுமை அதிகரித்து மாநிலத்தின் சொந்த வரிவருவாய் குறைந்த போதிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, புதிய வரிகள் எதுவும் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
‘காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் சட்டத்துக்குப் புறம்பாக அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொள்கிறது. இதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்’ என்றும் முதல்வர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.20 ஆயிரத்து 956 கோடியும், மின்சாரத் துறைக்கு ரூ.13 ஆயிரத்து 586 கோடியும், சாலைப் பணிகளுக்கு ரூ.1,262 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறைக்கு ரூ.5,568 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார மானியத்துக்காக மட்டும் ரூ.7,136 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ரூ.615 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உரிமங்கள், ஒப்புதல்களுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம் ஏற்படுத்துதல், ராமநாதபுரம் மாவட்டம் குதிரைவாய்மொழி, தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை ஆகிய இடங்களில் ரூ.1,947 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், ரூ.75 கோடி செலவில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் போன்றவை பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
2015-16 நிதி ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 681 கோடியே 33 லட்சமாகவும், மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 297 கோடியே 35 லட்சமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன. எனவே, வருவாய் பற்றாக்குறை ரூ.4 ஆயிரத்து 616 கோடியாக இருக்கும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கண்ணோட்டம்
மொத்த வருவாய் ரூ.1,42,681.33 கோடி
செலவினங்கள் ரூ.1,47,297.35 கோடி
வருவாய் பற்றாக்குறை ரூ.4,616.02 கோடி
முக்கிய அம்சங்கள்
* நாட்டிலேயே முதல்முறையாக மாநில தரவு ஆய்வு மையம்
* ரூ.134 கோடி செலவில் 169 புதிய நீதிமன்றங்கள்
* 3.5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா
* விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி பயிர்க் கடன்
* பொது விநியோக திட்ட மானியத்துக்கு ரூ.5,300 கோடி
* 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
* 15 லட்சம் வீடுகளுக்கு கழிப்பறை வசதி
* ராமநாதபுரம், தூத்துக்குடியில் ரூ.1,947 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
* சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ரூ.615.78 கோடி
* 6.62 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
* ஏலக்காய் மீதான மதிப்புக்கூட்டு வரி (வாட்) 2 சதவீதமாக குறைப்பு
* எல்ஈடி பல்புக்கு வாட் வரி 5 சதவீதமாக குறைப்பு
* ஏர் கம்ப்ரசர், மோட்டார் பம்புகளுக்கு வாட் வரி 5 சதவீதமாக குறைப்பு
* செல்போன் மீதான வாட் வரி 5 சதவீதமாக குறைப்பு
* உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு வரிவிலக்கு
தகவல்:
தி இந்து
|