THE ENVIRONMENT (PROTECTION) ACT, 1986 சட்டம் தனக்கு வழங்கிய அதிகாரத்தின் படி - மத்திய அரசு - CRZ விதிமுறைகளை (CRZ NOTIFICATION 1991) - 1991ஆம் ஆண்டு - அறிவிப்புச் செய்தது. கடலோர நகராட்சியாக காயல்பட்டினம் இருந்தாலும், இந்தச் சட்டம் - பரவலாக நகரில் அறியப்பட்டது 2010ஆம் ஆண்டு இறுதியிலிருந்துதான். (இந்தச் சட்டம் - 2011ஆம் ஆண்டு, சில திருத்தங்களுடன், மீண்டும் (CRZ NOTIFICATION 2011) அறிவிக்கப்பட்டது).
சிங்கித்துறையில் (கற்புடையார் பள்ளி வட்டம்) - சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீனவர்களுக்கு என - சுனாமி தொடர்பான திட்டமாக, 169 தொகுப்பு வீடுகள் கட்ட - தமிழக அரசு முடிவு செய்தது. காயல்பட்டினம் நகராட்சியும் இதன் பயனாளிகள் பட்டியலுக்கு ஒப்புதலையும் - ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் - வழங்கியது.
இந்த ஒப்புதல் வழங்கப்பட்ட சில மாதங்கள் கழித்து - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இந்தத் திட்டம் குறித்து எதிர்ப்புக் குரல் கொடுக்கத்
துவங்கியது. இத்திட்டத்தை எதிர்க்க பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தத் திட்டத்திற்கு என அரசு கையகப்படுத்திய நிலம் - CRZ
வரைமுறைக்குள் வருகிறது என்பதுதான் வெளிப்படையாகக் கூறப்பட்ட காரணம்.
இக்காரணத்தின் அடிப்படையில்தான் - சில மாதங்களுக்கு முன்னரே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றிய நகர்மன்றம், CRZ
விதிமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தத் திட்டத்தை எதிர்த்து - மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் அறிவுரைப் படி, அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான்,
இத்திட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றமும் தடை வழங்கியது. இன்று
வரை - 169 மீனவர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படவில்லை.
ஏறத்தாழ இதே நிலையில் தற்போது உள்ளதுதான் - 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான, தமிழக அரசின் பயோ காஸ் திட்டம்.
காயல்பட்டினம் நகராட்சியில் பயோ காஸ் திட்டம் அமைத்திட, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பரிந்துரை பெயரில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான் - தனது சர்வே எண் 278 இடத்தில், 2 பத்திரங்கள் மூலமாக - 5.5 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார். இதில் 1.5 ஏக்கர் நிலம் - சாலைக்கு என வழங்கப்பட்ட இடம் ஆகும்.
சாலைக்கு என வழங்கப்பட்ட இடத்தை, திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதன் பெரும்பகுதி CRZ-1 வரைமுறைக்குள் வருகிறது என்றும் காயல்பட்டணம்.காம் செய்திகள் வெளியிட்டுள்ளது.
இந்த இடம் CRZ விதிமுறைக்குள் வருவதாக கூறி - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் - இரு முறை -
இந்த இடத்தினை நிராகரித்து உள்ளது என்றும் காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே - மார்ச் 25 புதனன்று, அறிவிப்பு ஏதும் இல்லாமல், நகர்மன்ற ஆணையர் காந்திராஜ் தலைமையில், பயோ காஸ் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட்ட செய்தியையும் காயல்பட்டணம்.காம் வெளியிட்டது. தற்போது - அங்கு கட்டுமானப் பணிகளைத் துவக்க, ஆயத்த வேலைகளும் துவங்கியுள்ளன.
இந்த இடத்தில் - இத்திட்டத்தைத் துவங்கிட, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - அனுமதி வழங்கிவிட்டதா என காயல்பட்டணம்.காம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் - தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் துணைப் பொறியாளர் குணசேகரிடம் வினவியது.
காயல்பட்டினம் நகராட்சியிடம் இருந்து இத்திட்டத்திற்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பம் வந்துள்ளதாகவும், ஆனால் இது குறித்து இது வரை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார்.
நகராட்சியின் விண்ணப்பத்தில் - CRZ-1 வரைமுறைக்குள் வரும் சாலை குறித்த விபரம் இணைக்கப்பட்டுள்ளதா என்று காயல்பட்டணம்.காம்
வினவியது. சாலை குறித்த விபரம் இணைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வே எண் 278 இடம் - கிழக்கில், கடலினாலும் (500 மீட்டர் தூரம் வரை), வடக்கில், ஓடையினாலும் (சுமார் 100 மீட்டர் வரை) - CRZ
வரைமுறைக்குள் வருகிறது. சர்வே எண் 278 இடத்தில் - CRZ விதிமுறைகளின் தாக்கம் இல்லை என்ற சிலரின் வாதம், CRZ விதிமுறைகள் -
ஓடை, ஆறு போன்ற நீராதாரங்களில் இருந்து - அலைகளின் தாக்கம் அடிப்படையிலான தூரத்தையும் - கணக்கில் எடுக்கச் சொல்கிறது என்பதை அறியாமல் எடுத்து வைக்கப்படும் வாதமாகவே தெரிகிறது.
அந்த அடிப்படையில் - சாலைக்கு என வழங்கப்பட்டுள்ள 1.5 ஏக்கர் நிலம் உட்பட, சர்வே எண் 278இன் பெரும்பகுதி - CRZ - 1 (ECOLOGICALLY
SENSITIVE AREA) பிரிவின் கீழ் வருகிறது. CRZ-1 பகுதியில் புதிய சாலைகளுக்கு அனுமதி இல்லை என தெளிவாக CRZ NOTIFICATION 2011 கூறுகிறது. பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் - இதனை காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம், சமீபத்தில் ஊர்ஜிதம் செய்தார்.
சட்டம் இவ்வளவு தெளிவாக இருக்க, அரசு அதிகாரிகள், இந்த இடத்தில் - எந்த தைரியத்தில் பணிகளை துவக்கியுள்ளனர் என்ற கேள்வி எழும்புகிறது.
சட்ட விதிமுறைகள் குறித்த அறியாமை என்பது துவக்கத்தில் காரணங்களாக இருந்திருக்கலாம் என்றாலும், அந்த இடத்தில் உள்ள நடைமுறைச்
சிக்கல்கள் - பல வழிகளில், பல முறை தெரிவிக்கப்பட்ட பிறகும், அதே இடத்தில் பணிகளை செய்ய அரசு அதிகாரிகள் துணிவது - இந்தத் திட்டம்
அரசு திட்டம் என்பதும், இதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் - துவக்கத்தில் தயங்கினாலும், பின்னர் - அரசியல்வாதிகள் நிர்பந்தம்
காரணமாக ஒப்புதல் வழங்கிவிடுவார்கள் என்ற தைரியமே என்பதும் தெரிகிறது.
மேலும் - பல்வேறு காரணங்களுக்காக, பயோ காஸ் திட்டம் இந்த இடத்தில் அமைய துவக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வரும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தற்போது ஆளும் அ.தி.மு.க.வில் உள்ளார் என்பதும், அவரின் எதிர்ப்பை - ஆளும் கட்சி நபர்கள் மூலம் சரிகட்டி விடலாம் என்ற நம்பிக்கையிலும், இந்த இடத்தில் பணிகள் துவங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
CRZ விதிமுறை மீறல்கள் குறித்து நீதிமன்றங்கள் - கடுமையான நடவடிக்கைகளை சமீப காலங்களாக எடுத்து வருகின்றன. அப்படியிருந்தும் -
தொடர்ந்து இந்த இடத்தில், இத்திட்டத்தைக் கொண்டு வர அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் எடுக்கும் முயற்சிகளுக்கு - நீதிமன்றத்தின்
பார்வைக்கு இந்த திட்டம் செல்ல வாய்ப்புகள் குறைவு என்ற அசட்டு துணிச்சலே முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
[Administrator: படம் இணைக்கப்பட்டது @ 1:40pm / 11.4.2015] |