பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட 8 மார்க்க அறிஞர்களும், வாகன ஓட்டுநர் ஒருவரும் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டனர்.
இறந்தவர்களின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், சிகிச்சை பெற்று வருபவரின் பூரண உடல் நலனுக்காகவும், இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இவ்வாறிருக்க, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் - மறைந்தவர்களுக்காக ஙாயிப் ஜனாஸா தொழுகை நடத்துமாறும், அவர்களது குடும்ப நலனுக்காக நிதி சேகரிக்குமாறும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் - தமிழகத்தின் அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில், இன்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னர் ஙாயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ தொழுகையை வழிநடத்தினார். இத்தொழுகையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொழுகை நிறைவுற்றதும், மறைந்தவர்களது குடும்பங்களின் நலனுக்காக நிதி சேகரிக்கப்பட்டது. அனைவரும் தம்மாலியன்ற உதவித்தொகைகளை நன்கொடையாக வழங்கினர்.
தகவல்:
M.A.இப்றாஹீம் (48)
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |