வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த, ஆதார் எண் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அளிக்க, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இம்மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நாளை) சிறப்பு முகாம் நடைபெறுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மை படுத்தி விவரங்களை உறுதிபடுத்தும் திட்டத்திற்காக வாக்காளர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர். மேலும்,
>> ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அதனை நீக்கம் செய்திட படிவம் 7
>> வாக்காளர் பட்டியலில் வாக்காளர் குறித்த விபரங்களில் பிழைகள் இருப்பின் அதனை சரி செய்திட படிவம் 8
>> ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து குடியிருந்து வருவபா;களிடம் வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8ஏ
>> புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6
ஆகிய பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் மேற்படி விவரங்களை அளிக்காத விடுபட்ட வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை பெறுவதற்கும், படிவம் 6, 7 , 8 மற்றும் படிவம் 8ஏ பெறுவதற்கும், 12.4.2015 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
மேற்படி முகாமில் பணியிலிருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களையும் படிவம் 6, 7, 8 மற்றும் படிவம் 8ஏ ஆகியவற்றையும் வழங்கலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் புகைப்படம் தெளிவாக இல்லாதவர்கள் மற்றும் புகைப்படம் மாறி பதிவாகியுள்ளவர்கள் தங்களது புகைப்படத்துடன் சென்று புகைப்படத்தினை மாற்றம் செய்திட மனு செய்யலாம். வாக்காளர்கள் மேற்படி சிறப்பு முகாமைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, நாளை (ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணி முதல் 17 மணி வரை, காயல்பட்டினத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அவரவர் வாக்குச் சாவடிகளில் மேற்கண்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |