திருமணம் முடிந்த கையோடு பெண் வீட்டிற்கு புறப்பட்டுச்செல்லும் வழக்கம் என்பது காயல்பட்டினத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றது.
இத்தகவலைக் கேள்விப்படும் வெளியூர்வாசிகள் பலர் காயல்பட்டினத்தின் இந்த பண்பாட்டுத் தனித்தன்மையைக் குறித்து ஒட்டியும், வெட்டியும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
காயல்பட்டினத்தின் இந்த பண்பாட்டுத் தனித்தன்மையானது, ஊர் - மாநிலத்தையும் தாண்டி பார்க்கப்படுகிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் “காயல்வரலாறு” பகுதியில் இடம்பெற்ற “காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...!” என்ற ஆக்கத்தில், அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் இது போன்ற பழக்கம் நடைமுறையில் உள்ள தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, அண்மையில் இது தொடர்பாக விரிவான கள ஆய்வு ஒன்றும் நடைபெற்றுள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:-
சென்னை அடையாறில் உள்ள - சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் {MADRAS INSTITUTE OF DEVELOPMENT STUDIES – MIDS } இம்மாதம் 06ஆம் நாள் திங்கட்கிழமையன்று 15.30 மணிக்கு, “தென்னிந்தியாவில் தாய் வீட்டில் தங்கி வாழும் திருமணம்“ {Matrilocal Marriage In South India} என்ற தலைப்பில் உரை நடைபெற்றது.
பணி நிறைவு பெற்ற பேராசிரியரும் அமெரிக்கா நாட்டின் போல்டர் பகுதியில் உள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறையின் சிறீலங்கா ஆய்விற்கான அமெரிக்க கழகத்தின் தலைவருமான டென்னிஸ் மக்கில்வாரி (Dennis McGilvray) காணொளி காட்சிகளுடன் உரை நிகழ்த்தினார்.
நடுவன் ஆளுகைப் பகுதியான காரைக்காலில் தொடங்கி தமிழகத்தின் கடற்கரையோர ஊர்களான நாகூர், அதிராம்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டத்தின் உட்பகுதிகளான செக்காரக்குடி, திருவைகுண்டம், கேரளத்தின் வெட்டுத்துறா, கோழிக்கோடு, தலஸ்ஸேரி, கண்ணூர், பய்யனூர் வரை உள்ள பகுதிகளில் தன்னுடைய கள ஆய்வில் கண்டறிந்த - திருமணத்திற்குப் பிறகு மணமகள் தாய்வீட்டு தங்கல் முறைகளைப் பற்றி பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி விவரித்தார்.
தன்னுடைய கள ஆய்வுப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் முஸ்லிம் மரைக்காயர்கள், ஹிந்து வெள்ளாளர்கள், கேரளத்தின் கிறிஸ்தவ மீனவர்கள், கோயா, மாப்பிள்ளா, கேயீ, அரக்கல் முஸ்லிம் சமூகங்களிடையே கவனம் செலுத்தியுள்ளார் பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி.
திருமணம் முடித்த மகள்களுக்கென தனி வீடு, ஒரே வீட்டிற்குள்ளேயே இரண்டு மகள்களுக்கும் ஒரே மாதிரியான வசதிகளுள்ள இரட்டை அமைப்பு முறை, தாயுடன் வாழாமல் மகளின் தனித்த வீட்டில் கணவன் வந்து வசிப்பது, ஒரே வீட்டினுள் மகளுக்கென தனி அறை என அவரின் உரையில் சுவையான பல தகவல்கள் வெளியாயின.
தமிழகத்தின் செக்காரக்குடியின் நான்குடி வெள்ளாளர்கள், திருவைகுண்டத்தின் கோட்டை வெள்ளாளர்கள், கேரளத்தின் வெட்டுத்துறா மீனவர்கள் போன்ற முஸ்லிமல்லாத சமூகங்களும் தாய்வழி தங்கல் முறையைக் கடைபிடிப்பதாக அவர் தெரிவித்தார்.
பொதுவாகவே, இந்தப் பகுதிகளில் தாய் வீட்டுத்தங்கல் முறைகளுடன் தாய்வழித்தாய் வழித்தோன்றல் முறைமை (MATRILINEAL), தந்தை வீட்டுத் தங்கல் முறை, தனிக்குடித்தன முறைகளும் நடைமுறைகளில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது உரையைத் தொடர்ந்து கேள்வி–விடைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
“இந்த தனித்த பண்பாட்டுக் கூறின் தொடக்கப்புள்ளி எது?” என்ற கேள்விக்கு அவர் விடையளிக்கையில், “அந்தப் பகுதி மர்மமாகவே உள்ளது” என்றார்.
இந்த நிகழ்விற்கு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக பண்பாட்டு அறிவு வரலாற்றுத் துறையின் கலையியற்குழு பொறுப்பாளர் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், கல்வி - மனித உரிமை செயற்பாட்டாளருமான முனைவர் வஸந்தி தேவி, ஆவணப்பட இயக்குநரும் ஒளிப்படக் கலைஞருமான கோம்பை எஸ்.அன்வர், இலங்கை கொழும்பு கல்கிஸ்ஸவைச் சேர்ந்த பணி நிறைவு பெற்ற ஆங்கில ஆசிரியர் நிழாம் ஹமீத், அப்சர்வர் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் சென்னை பிரிவின் இயக்குநர் என்.ஸத்ய மூர்த்தி உட்பட பல பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த உரைக்கான கள ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி, நிழாம் ஹமீத் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதத்தில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தகவல்கள் சேகரித்துச் சென்றமை குறிப்பிடத்தகுந்தது.
பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி - மானுடவியல், திருமணம், இனமுறுகல், சாதி, ஸூஃபியிசம், சமூகவியல், கைவினை, சிற்பம், கோயில், இலங்கைத் தமிழர் - முஸ்லிம் உறவு தொடர்பான ஆய்வுகளுக்காக இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் கணிசமான காலத்தைக் கழித்துள்ளார்.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கராக இருந்தபோதிலும், தனது ஆய்வுக்களம் தமிழ் வழங்கும் பகுதி என்பதால் அவர் தமிழை முழுமையாகக் கற்றுக்கொண்டுள்ளார். இதுவரை அவர் 5 தனி ஆய்வு நூல்களும், 9 இதழ் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி, அமெரிக்காவிலுள்ள பல கல்வி - ஆய்வு சார் நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளதோடு, விருதுகள் பலவும் பெற்றுள்ளார். இவர் ஒரு இன விளக்கவியல் ஒளிப்படக்கலைஞரும் கூட. [Website: http://www.colorado.edu/anthropology/mcgilvray/Home.html]
‘தென்னிந்தியாவில் தாய்வழி தங்கல்’ பற்றிய இவரது ஆய்வானது, விரைவில் வெளிவரவுள்ள “A House for Every Daughter : Matrilocal Marriage in Sri Lanka and Beyond“ என்ற ஆங்கில நூலின் ஓர் அத்தியாயமாக இடம்பெறவுள்ளது.
களத்தொகுப்பு, செய்தியாக்கம் மற்றும் படங்கள்:
சாளை பஷீர் ஆரிஃப்
எழுத்தாளர் / சமூகப் பார்வையாளர்
[தலைப்பில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 22:20 / 12.04.2015] |