ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் சார்பில், ‘காயலர் தினம்’ என்ற பெயரில் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயலர் தினம்:
துபை - காயல் நல மன்றம் நடத்திய 'காயலர் தினம்' மிகவும் விமர்சையாகவும், கோலாகலமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. முன்னதாக, தன்னார்வத் தொண்டர்கள் காலை 7 மணியிலிருந்தே தங்களுக்கு அளிக்கப்பட பொறுப்புகளை செய்யத் தொடங்கினர். தெய்ரா அஸ்கான் சமூகக் கூடத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட பேருந்துகளில் உறுப்பினர்கள் பூங்காவிற்கு வரத்தொடங்கினர்.
குறித்த நேரத்தில் வந்தோருக்கு குலுக்கலில் பரிசு:
நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்தில் வந்த உறுப்பினர்களை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் வந்த அனைவருக்கும், சிற்றுண்டியும், தேநீரும் பரிமாறப்பட்டன.
காலை 10 மணிக்குள் வந்தவர்கள்
காலை 11 மணிக்குள் வந்தவர்கள்
ஜும்ஆ தொழுகைக்கு முன் வந்தவர்கள்
ஜும்ஆ தொழுகைக்கு பின் வந்தவர்கள் என நான்கு விதமாக குலுக்கல் நடத்தப்பட்டன.
காலை 10 மணிக்குள் பூங்காவிற்கு வந்து தத்தமது பெயர்களை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு குலுக்கலில் 4 வாய்ப்புகளும்,
காலை 11 மணிக்குள் பூங்காவிற்கு வந்து தத்தமது பெயர்களை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு குலுக்கலில் 3 வாய்ப்புகளும்,
ஜும்ஆ தொழுகைக்கு முன் பூங்காவிற்கு வந்து தத்தமது பெயர்களை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு குலுக்கலில் 2 வாய்ப்புகளும்,
ஜும்ஆ தொழுகைக்கு பின் பூங்காவிற்கு வந்து தத்தமது பெயர்களை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு குலுக்கலில் 1 வாய்ப்பும் கொடுக்கப்பட்டு தங்க நாணயங்கள், தோஷிபா கம்ப்யூட்டர் டேப்லெட் உட்பட விலையுயர் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோருக்காக தனித் தனியே குலுக்கல் நடைபெற்று அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வருகைப் பதிவு:
உறுப்பினர்களின் வருகையை பதிவுசெய்வதற்காக அதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வ தொண்டர்கள் மிகவும் சுறுசுறுப்பாக அவர்களின் வேலையை செய்துகொண்டிருந்தனர்.
தலைமையுரை:
ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் மன்றத்தின் கூட்டம் இனிதே துவங்கியது. கூட்டத்திற்கு மன்றத்தின் தலைவர் J S A புஹாரி தலைமை தாங்கினார். ஹாபிழ் நஹ்வி S A இஷ்ஹாக் லெப்பை இறைமறை வசனங்களை ஓதினார். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி ராவன்னா அபுல்ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து தலைவர் உரை இடம்பெற்றது. இவ்வுரையில், மன்றத்தின் பணிகள் குறித்தும், ஒவ்வொரு உறுப்பினர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்தும் விளக்கினார்.
சிங்கை கா.ந.மன்ற து.தலைவர் உரை:
சிங்கப்பூரிலிருந்து வருகைத்தந்துள்ள, காயல் நல மன்றம் - சிங்கப்பூரின் துணைத் தலைவர் சகோதரர் மொகுதூம் முஹம்மது சிற்றுரை ஆற்றினார். இவர் பேசுகையில் மன்றத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களாக, தாயகத்திலிருந்து வருகைதந்துள்ள ஜனாப் அய்யூப் ஹாஜியார், ஜனாப் செய்யது முஹியதீன் ஹாஜி, ஜனாப் ரபீக், ஜனாப் முஹம்மத் முஹியதீன் ஆகியோர் நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.
புதியோர் அறிமுகம்:
அமீரகத்திற்கு வேலை வாய்ப்பை நாடி வந்துள்ள நமதூர் சகோதரர்கள் (பத்து பேர்) இக்கூட்டத்தில் தங்களை அறிமுகப்படுத்திகொண்டனர். நமதூரிலேயே இருப்பது போன்ற ஒரு பரவசம் இந்நிகழ்ச்சியில் அடைந்ததாக அவர்கள் உணர்ந்தனர்.
மதிய உணவாக களறி சாப்பாடு:
முதலாம் அமர்வு முடிவுற்றதும் நாவில் நீர் ஊறும் காயல் களரி சாப்பாடு மகளிருக்கும், சிறுமியற்கும் பரிமாறப்பட்டது. அதன்பின் ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டது. பார்த்துப் பார்த்து பக்குவத்துடன் செய்யப்பட்ட இப்பாரம்பரிய உணவை பரவசத்துடன் இப்பாலையில் ஏற்பாடு செய்த உணவுக்குழுவினருக்கு மிகுந்த நன்றியை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அருள்மழை:
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அல்லாஹ்வின் அருள், முகில்கள் வழியே பொழிந்தது. பாதிபேர் அதனை தாங்களின் மேனிகளில் தாங்கிகொண்டனர் . மீதிபேர் இந்த ரஹ்மத் தங்களின் கால்களினால் மிதிபட கூடாதே என ஓரமாக நின்றுகொண்டனர்.
போட்டிகள்:
சிறிது நேர இடைவெளிக்குப்பின், பொது அறிவு போட்டிகள் நடைபெற்றன. உறுப்பினர்கள் பதின்மர் ஒரு குழுவாக, 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. 'இந்திய நண்டுக் கொள்கை' (INDIAN CRAB POLICY) நாணிடும் வண்ணம் ஒருவரை மற்றொருவர் காலை வாரி அவரவர் குழுவிற்கு அதிக புள்ளிகளை சேர்ப்பதில் மிகவும் உன்னிப்பாய் இருந்தனர். இறுதியில், வெற்றி பெற்ற குழுவினருக்கும், வெற்றிக்கு முனைந்த குழுவினருக்கும் அஜ்மல் வாசனை திரவியமும், யுனிவர்சல் சீரியல் பஸ்ஸும் (USB) பரிசுகளாக வழங்கப்பட்டன.
பொஞ்சரிப்பிற்கிடையே ‘கேம் அங்கிள்’
இது ஒருபுறம் நடக்க, சிறுவர் சிறுமியர் வழமைபோல் கேம் அங்கிளை பொஞ்சரிக்க, அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் துவங்கின. வளிக்கூண்டு உடைக்கும் போட்டி (BALOON FIGHTING) இசை நாற்காலி (MUSICAL CHAIR) ஓட்டப் பந்தயம் (RUNNING RACE) ஆகியவை நடாத்தப்பட்டு, ஒவ்வொரு விளையாட்டுகளிலிருந்தும் மூவர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உறுப்பினர் கருத்துப் படிவம்:
'உறுப்பினர் கருத்துப் படிவம்' என்று ஒரு படிவம் புதிதாக இம்முறை வடிவமைக்கப்பட்டு அணைத்து உறுப்பினர்களுக்கும் (மகளிர் உட்பட) ஒவ்வொருவரின் ஆலோசனைகள், கருத்துகள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் என அவரவர் எண்ணங்களை பிரதிபலிக்க இப்படிவம் வழங்கப்பட்டு மீண்டும் பெறப்பட்டது. இப்படிவங்களையும் குலுக்கி அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
மழலையருக்கு இனிப்பு:
இஃதன்றி, ஐந்து வயதிற்குட்பட்ட அணைத்து குழந்தைகளுக்கும் (சுமார் 50 பேர்) ஒரு அழகிய கொள்கலனில் (CONTAINER) குச்சு மிட்டாய், சாக்லேட் போன்ற இனிப்புகள் நிரப்பப்பட்டு வழங்கப்பட்டன. 6 வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்க்கு (சுமார் 40 பேர்) அழகிய கண்ணாடி கொள்கலன்கள் (GLASS CONTAINERS) வழங்கப்பட்டன.
தேனீர், சிற்றுண்டி:
நிறைவாக, மாலைப் பொழுதினில், சூடான தேநீரும், சமூசாவும் அனைவருக்கும் பரிமாறப்பட்டன. தொடர்ந்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனுசரணையளித்தோர்:
இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு பரிசுகளை வழங்கிஅனுசரணை அளித்தவர்கள்:
ஜனாப் விளக்கு ஷெய்க் தாவூத் (முத்து தங்க மாளிகை) இரண்டு தங்க நாணயங்கள்
ஜனாப் A J முஹம்மது அய்யூப் (ஜமீல் ஜுவெல்லர்ஸ்) ஒரு தங்க நாணயம்
ஜனாப் J S A புகாரி (அரிஸ்டோ ஸ்டார்) 5 மந்திரக் குவளைகள்
ஜனாப் V S M முஹம்மது அபுபக்கர் (தோஷிபா எளிவேட்ட்ர்ஸ்) தோஷிபா கம்ப்யூட்டர் டேப்லெட்
ஜனாப் இப்ராஹீம் (J C ஸ்டார்) தானியங்கி நறுமண குடுவை
ஜனாப் ராவன்னா அபுல்ஹசன் - 3 சுவர் கடிகாரங்கள்
ஜனாப் சாளை சலீம் (ஹலி மேலாண்மை ஆலோசகர்கள்) - கை மின்களப்பி (HAND BLENDER)
இப்பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு பல்வேறு குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. பொறுப்புகள் வழங்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரவர் பணிகளை செவ்வனே செய்திருந்தனர்.
மொத்தத்தில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரின் பங்களிப்பும், அணைத்து உறுப்பினர்களின் வருகையும், ரம்மியமான சீதோஷ்ண நிலையும் நிகழ்ச்சியை சிறப்பாக்கி வைத்தன.
முழு படத்தொகுப்பு இணையத்தில்...
மனதிற்கு இதமான படங்கள் நிறையவே உள்ளன. அவற்றை, https://plus.google.com/photos/115944011514185348203/albums/6130972255248663249/6131633292622349170?hl=en&pid=6131633292622349170&oid=115944011514185348203 என்ற இணைப்பில் சொடுக்கிக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை காயல் நல மன்றத்தின் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட ‘காயலர் தினம்’ குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |