ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், மருத்துவ உதவி வகைக்காக 20 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜூன் மாதம் 25ஆம் நாளன்று நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 30ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, மன்றத்தின் இணைச் செயலாளர் கே.ஹுபைப் தலைமையில், செயற்குழு உறுப்பினர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் கூடியது. நோனா அபூஹுரைரா கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த (6ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் புனித ரமழான் மாத முதல் வாரத்தில் - அதாவது, ஜூன் மாதம் 25ஆம் நாளன்று வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடம் குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டு, தனி அழைப்புச் செய்தியாக வெளியிடப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ உதவி:
மன்றத்தின் மருத்துவக் குழுவால் முன்வைக்கப்பட்ட - இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அவ்வகைக்காக - ஷிஃபா மூலம் 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகரின் பொதுத் தேவைகள், குறைபாடுகள் குறித்த அலசல்:
நமதூர் காயல்பட்டினத்தின் பொதுவான பிரச்சினைகள், தேவைகள், குறைபாடுகள் குறித்து அலசி ஆராயப்பட்டு, நிவர்த்தி செய்ய ஆலோசனைகள் பெறப்பட்டது.
குறிப்பாக, நமது ஊர் K.M.T. மருத்துவ மனையின் பல குறைபாடுகள் மன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டது. அம்மருத்துவமனையை மிக சிறந்ததாக உருவாக்கும் முயற்ச்சியில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப். L.அப்துல் ரஜாக் அவர்கள் மூலம் K.M.T. மருத்துவ மனையின் செயலாளர் ஜனாப். வாவு எம்.எம்.முஃதஸிம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டதில், அவர்கள் ஒரு சில உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் விளக்கங்களை தந்ததுடன், தான் மற்றும் தமது நிர்வாகம் உலகளாவிய காயல் நலமன்றங்கள் எடுத்துரைக்கும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் குறைகளுக்கு முழுமையான நிரந்தர தீர்வு காண தயாராக இருப்பதாக கூறி தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு குறைகளை சுட்டிக்காட்டினால் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய பதில் உறுப்பினர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது. அதனை தொடர்ந்து நேரமின்மை காரணமாக நமது மன்றத்தலைவர் அவர்கள் K.M.T. மருத்துவமனை தொடர்பாக தனி கூட்டமொன்று கூட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்களிடமும் நிறை, குறை மற்றும் ஆலோசனைகள் கேட்டறிந்து தனி அறிக்கையாக K.M.T. நிர்வாகத்திற்கு சமர்பித்து மற்ற மன்றங்களுடனும் தொடர்பு கொண்டு நிரந்தர தீர்வு காணலாம் என்று சொல்ல, அது தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டதோடு, அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 08 – 05 - 2015 ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்தார்.
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக
M.E. முகியதீன் அப்துல் காதர்
(செய்தி மற்றும் ஊடகத் துறை பொறுப்பாளர்)
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (29ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |