பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட 8 மார்க்க அறிஞர்களும், வாகன ஓட்டுநர் ஒருவரும் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டனர். ஒரு மார்க்க அறிஞர் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்தவர்களின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், சிகிச்சை பெற்று வருபவரின் பூரண உடல் நலனுக்காகவும், இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், இம்மாதம் 03ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வேண்டுகோள் படி, மறு வாரம் (ஏப்ரல் 10) வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் - மறைந்தவர்களுக்காக ஙாயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதுடன், மறைந்தோர் குடும்ப நலனுக்காக நிதியும் சேகரிக்கப்பட்டு வந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தின்போதும் இவ்வகைக்காக நிதி சேகரிக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, ஜாவியா அரபிக்கல்லூரி, சிறிய குத்பா பள்ளியின் சார்பில் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் சார்பில் அதன் கத்தீப் மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் முதலானோர் திரட்டிய மொத்த நிதியாக சுமார் 5 லட்சம் ரூபாய் தொகையை - அதன் பொறுப்பாளர்கள் மதுரைக்குச் சென்று, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் ஒப்படைத்துள்ளனர்.
சேரும் மொத்த நிதியுதவித் தொகை அடிப்படையில், மறைந்தவர்களது குடும்ப நலனுக்காக நிரந்தர வருமானம் தரத்தக்க செயல்திட்டத்தை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வடிவமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நிதி, அக்கட்சியின் தலைமை நிலையத்தின் மொத்த நிதியுடன் சேர்த்து வழங்கப்படவுள்ளது.
தகவல்:
M.A.இப்றாஹீம் (48) |