காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பொதுச்சேவை மையம். அரசிடமிருந்து பெறப்பட வேண்டிய முக்கியமான சான்றிதழ்களை இச்சேவை மையத்திலிருந்து ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, தற்போது ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான பதிவுகளும் இங்கு நடைபெற்று வருகிறது. கடந்த (ஏப்ரல் 10) வெள்ளிக்கிழமை முதல், கணக்கெடுப்பில் இடம்பெறாத புதியவர்களுக்கும் இப்பொதுச்சேவை மையம் வழியாக விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு, ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவுகள் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்பொதுச்சேவை மையத்தில், காயல்பட்டினம் நகர மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் சேவைகளைப் பெறுவதற்காக அன்றாடம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு முறையான - முழுமையான இருக்கை வசதி செய்யப்படவில்லை. குடிநீர் வசதியும் இல்லை. அத்துடன், இங்கு ஒரேயொரு கணினி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்தது.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகரின் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டதாகத் தெரிகிறது. திருச்செந்தூர் வட்டாட்சியரிடம் பொதுச்சேவை மைய அலுவலர்களாலும் இதுகுறித்து முறையிடப்பட்டதையடுத்து, நேற்று முதல் இங்கு கூடுதலாக ஒரு கணினி அமைக்கப்பட்டு, அதற்கென கூடுதலாக ஓர் அலுவலரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, தற்போது அங்கு இரண்டு கணினிகளில் இரண்டு பெண் அலுவலர்கள் ஆதார் பதிவுப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க, காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலும், அதையொட்டியும் அமைந்துள்ள - காயல்பட்டினம் நகராட்சிக்குச் சொந்தமான இரண்டு கிணறுகளையும் நடப்பாண்டு குத்தகைக்கு எடுத்துள்ளோர், இப்பொதுச்சேவை மையத்திற்கு வந்து செல்வோர், அவ்வழியே கடந்து செல்வோர் நலன் கருதி மகாத்மா காந்தி நினைவு வளைவையொட்டிய கிணற்றின் முன்புறத்தில், குடிநீர் குழாய் ஒன்றை அமைத்து, எவ்வித கட்டணமுமின்றி குடிநீர் பருக வசதி செய்துள்ளனர்.
அப்பகுதி வழியே செல்லும் கால்நடைகள் குடிநீர் பருகுவதற்காக, கிணற்றையொட்டி வீணாகும் நீரைச் சேமித்து, விரைவில் ஒரு தண்ணீர்த்தொட்டியும் அவ்விடத்தில் அமைக்கவுள்ளதாக, குத்தகைதாரர் ஆர்வமுடன் தெரிவித்துள்ளார்.
பொதுச்சேவை மையம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |