மாசு கட்டுப்பாட்டு வாரிய அகராதியில் SOUTH = வடக்கு?! (பாகம் - 1)
காயல்பட்டினம் நகராட்சியில் - 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழக அரசின் பயோ காஸ் திட்டம், காயல்பட்டினம் தென் பாகம் கிராமம் சர்வே
எண் 278 நிலத்தில் துவக்கப்பட ஆயத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கான பூமி பூஜை - மார்ச் 25 அன்று, நகராட்சி ஆணையர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 3 மாதங்களில் இரு முறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்த இந்த இடத்தில் இப்பணிகள் எந்த அடிப்படையில் தற்போது துவக்கப்பட்டன என்ற கேள்விகள் எழும்பியுள்ளன.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறுதலான தகவல்கள் அடிப்படையில் அந்த இடத்தை நிராகரித்ததாகவும், தற்போது அது சரி செய்யப்பட்டு
விட்டதாகவும் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் - மாவட்ட கடலோர பகுதிகள் மேலாண்மை அமைப்பு (DCZMA) உள்ளது. அதற்கு மாவட்ட ஆட்சியர்
தலைவர் ஆவார். அதில் இதர உறுப்பினர்களாக - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் நகர் ஊரமைப்பு
இயக்ககம் (DTCP) அமைப்பின் துணை இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.
காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278இல் திடக்கழிவு திட்டம் அமைந்திட சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை, இந்த மூவர் குழுவில்
இருவர் இதுவரை நிராகரித்துள்ளனர்.
தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தனது ஜனவரி 12, 2015 தேதிய கடிதத்தின் மூலம் இந்த இடத்தினை நிராகரித்தது.
மற்றொரு உறுப்பினரான DTCP துணை இயக்குனர் - தனது பிப்ரவரி 19, 2015 தேதிய கடிதம் மூலம் இந்த இடத்தினை நிராகரித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க - இந்த முடிவினை மாற்றிட, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமும், ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்கள் மூலமும் - மாசு
கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை காயல்பட்டணம்.காம் இணையதளம் ஏற்கனவே
வெளியிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக - காயல்பட்டினம் நகராட்சி, மீண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், புதிய விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளது. இது
குறித்து காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தகவல் வழங்கிய, மாசு கட்டுப்பாட்டு வாரிய துணை சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் -
விண்ணப்பம் குறித்த முடிவு இது வரை எடுக்கப்படவில்லை என கூறியிருந்தார்.
இந்த புதிய விண்ணப்பத்தில் - அணுகு சாலை குறித்த விபரங்கள் இணைத்து வழங்கப்படவில்லை என மேலும் அவர் காயல்பட்டணம்.காம்
இணையதளத்திடம் ஊர்ஜிதம் செய்தார்.
கடுமையான நெருக்கடிக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தொடர்பான அதிகாரிகளுக்கு - இது
இக்கட்டான நிலையாகும். கடந்த மூன்று மாதங்களில் - இரு முறை நிராகரித்த இடத்தினை, நெருக்கடி காரணமாக, தற்போது மாற்றி ஒப்புதல்
வழங்குவது என்பது எளிதான விஷயம் அல்ல.
இந்த பின்னணியில் தான் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறுதலான தகவல்கள் அடிப்படையில் அந்த இடத்தை முதலில் நிராகரித்ததாக செய்திகள்
வெளியிடப்பட்டுள்ளன.
அந்த செய்திகள் - திடக்கழிவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இடம் - காயல்பட்டினம் தென் பாகம் கிராமம் சர்வே எண் 278 என்றும், ஆனால் மாசு
கட்டுப்பாட்டு வாரியம் அந்த இடத்தினை வட பாகம் கிராமம் சர்வே எண் 278 என்று நினைத்து நிராகரித்து விட்டது என்றும் கூறுகின்றன.
இந்த விளக்கம் எவ்வளவு தூரம் உண்மை என்பதை - மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பிய ஜனவரி 12, 2015 தேதிய
கடிதம் விளக்குகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஜனவரி 12, 2015 தேதிய கடிதம்
இந்த கடிதத்தில் உள்ள கீழ்க்காணும் விஷயங்கள் - வட பாகமா / தென் பாகமா என்ற எந்த குழப்பத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அப்போது
இல்லை என்பதனை தெளிவு படுத்துகிறது.
(1) அந்த கடிதத்தின் பொருள் பகுதி (Subject), நிராகரிப்பு - தென் பாக கிராமம் (South Village) நிலம் குறித்தே என்று தெளிவாக கூறுகிறது
(2) அந்த கடிதத்தின் மேற்கோள்காட்டும் பார்வை பகுதி (Reference), மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் - இந்த நிராகரிப்பை, நேரடி கள
ஆய்வுக்கு பின்னரே செய்தனர் என்றும் விளக்குகிறது (site inspection on 7.1.2015)
(3) மேலும் இந்த விண்ணப்பம், சர்வே எண் 278இன் உட்பிரிவு 1 (278/1) குறித்தது என்றும் தெரிவிக்கிறது. காயல்பட்டினம் வட பாக கிராம
பகுதியில் அமைந்துள்ள சர்வே எண் 278, அரசு புறம்போக்கு நிலமாகும். மேலும் அது ஒரு காலத்தில் கொட்டமடைக்காடு பகுதியாக ஆவணங்கள்
தெரிவித்த இடம் மட்டும் அன்றி, எந்த உட்பிரிவுக்கும் (Sub-Division) தற்போது வரை உட்படுத்தப்படாத நிலமும் ஆகும்.
எனவே - அரசு அதிகாரிகள், நகராட்சி விண்ணப்பம் - வட பாகம் கிராமம் குறித்ததா அல்லது தென் பாகம் கிராமம் குறித்ததா என்ற
குழப்பத்தில், தவறான அறிக்கை வழங்க வாய்ப்புகள் இல்லை. நிராகரிப்பு கடிதம் KAYALPATTINAM SOUTH VILLAGE என்று தெளிவாக
கூறுகிறது.
மேலும் - மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், இந்த இடத்தினை பற்றி - குறைந்தது, ஆறு ஆண்டுகளாக அறிவர். சர்வே எண் 278 இடம் - 2010ம் ஆண்டே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிராகரிக்கபப்ட்ட இடமாகும்.
இந்த இடத்தினை - மாவட்ட ஆட்சியர், அக்டோபர் 8, 2013 - நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
அவரை - தொடர்ந்து, அக்டோபர் 22, 2013 அன்று - அப்போதைய மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோகுல்தாசும் நேரடியாக இந்த இடத்தை கள ஆய்வு செய்துள்ளார். இந்த கள ஆய்வின் போது, நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆணையர் ஜி.அசோக் குமார், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ், 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர், 18 வது வார்டு உறுப்பினர் ஈ.எம். சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
எனவே - தவறுதலான தகவல் அடிப்படையிலோ, நேரடியாக பார்க்காமலோ - மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது என்று கூறுவது, தற்போது இவ்வாரியம் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மறைக்க கூறப்படும் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது.
[தொடரும்]
|