தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோருக்கு ஆதார் அட்டை பதிவுக்கான விண்ணப்பங்கள் நிரந்தர முகாம்களில் நேற்று (ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை) முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது விடுபட்டவர்கள் இதுவரை ஆதார் அட்டை இல்லாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் ஆதார் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) முதல் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வசிப்போருக்கு பழைய மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் உள்ள மையத்திலும், காயல்பட்டினம் நகராட்சி பகுதியைச் சேர்ந்தோருக்கு காயல்பட்டினம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சேவை மையத்திலும் (மகாத்மா காந்தி நினைவு வளைவு அருகிலுள்ள பொதுச் சேவை மையம்), கோவில்பட்டி நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இதுதவிர, தூத்துக்குடி வட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்தோருக்கு பழைய துறைமுகம் அருகேயுள்ள சார் ஆட்சியர் அலுவலகத்திலும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்தோருக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
வாரத்தில் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நான்கு தினங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஆதார் பதிவிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். எனவே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்ட பொது மக்கள் ஆதார் பதிவிற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அந்தந்த மையங்களிலேயே ஆதார் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மூலம்:
தினமணி இணையதளம்
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |