“ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலையை மூடுவதற்காக சில தேச விரோத அமைப்பினர் திட்டம் தீட்டுகின்றனர்; அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம கோபாலன் பேசியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை வாலைகுருசாமி கோவில் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 28ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 03 வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் நேற்று காலையில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக இந்து முன்னணி நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில், போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல், வழக்கை திசை திருப்ப முயலுகின்றனர். கோவையில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி இந்து முன்னணியின் 7-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதை சீர்குலைப்பதற்காகவே அங்குள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். போலீசாரின் செயல்பாட்டைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
சாத்தான்குளம் தாலுகா புத்தன்தருவை பகுதியை வளப்படுத்தக்கூடிய கன்னடியன் கால்வாய் திட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு கூடுதல் நிதி பெற்று விரைந்து நிறைவேற்ற வேண்டும். தூத்துக்குடி மாசுக்கள் நிறைந்த நகரமாக உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நவீன இயந்திரங்களை பொருத்தி, மாசுக்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலையை மூடுவதற்காக சில தேச விரோத அமைப்பினர் திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபநாசம் கோவில், மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை வனத்துறையினர் இடையூறு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் எத்தனை கோவில்கள் உள்ளன? அதன் சொத்துகள் எவ்வளவு? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மகராஷ்டிரா மாநிலத்தில் பசு வதை தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தரிசன கட்டணம் மற்றும் பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் பேசினார். மாநில தலைவர் டாக்டர் அரசுராஜா, துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், நிர்வாகக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், மாவட்ட தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் சக்திவேலன், செய்தி தொடர்பாளர் சுந்தரவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தகவல் மூலம் & படம்:
தூத்துக்குடி ஆன்லைன்
இந்து முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |