கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றத்தின் 23ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், கத்தர் நகரிலுள்ள Mubeirek Family Parkஇல், இம்மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
உறுப்பினர்கள், அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் 09.30 மணியளவில், நிகழ்விடம் வந்தடைந்தனர். குடும்பத்துடன் வந்தோர் தனி வாகனங்களில் வந்து சேர்ந்தனர்.
10.00 மணியளவில், உறுப்பினர் வருகைப் பதிவு, நிலுவைச் சந்தா சேகரிப்பு ஆகியன நடைபெற்றன. அவற்றின் தொடர்ச்சியாக இட்லி, பொங்கல், வடை, சாம்பார் பதார்த்தங்களுடன் அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது.
நீண்ட காலத்திற்குப் பின் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டதால், அனைவரும் தமக்கிடையில் சுகம் விசாரித்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டவர்களாக, அரட்டையில் மூழ்கினர்.
சிறுவர் நிகழ்ச்சிகள்:
10.30 மணியளவில், மழலையருக்கு - திருமறை குர்ஆனின் சிறு அத்தியாயங்கள், இளஞ்சிறாருக்கு அஸ்மாஉல் ஹுஸ்னாவில் 15 திருப்பெயர்கள், சிறுவர் - சிறுமியருக்கு அஸ்மாஉல் ஹுஸ்னாவில் 25 திருப்பெயர்களும் மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
மன்றத்தின் மூத்த உறுப்பினர் சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற செய்மூஸா, எம்.என்.சுலைமான், ஹல்லாஜ் ஆகியோர் போட்டிகளை வழிநடத்தினர்.
கைப்பந்து விளையாட்டு:
11.00 மணியளவில், உறுப்பினர்களுள் சிலர் ஈரணிகளாகப் பிரிந்து, கைப்பந்து விளையாடினர்.
ஜும்ஆ இடைவேளை:
ஜும்ஆ தொழுகைக்கான நேரம் நெருங்கியதும், அனைவரும் நிகழ்விடத்திற்கு அருகிலிருந்த பள்ளிக்குச் சென்று ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றித் திரும்பினர். வரண்டிருந்த நாவுகளை நனைத்து மகிழ்வூட்ட – அனைவருக்கும் பழச்சாறுகளும், புதிய அறிமுகமாக பல்சுவைகளைக் கொண்ட தயிர் கோப்பையும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இவற்றுக்கான ஏற்பாடுகளை உறுப்பினர் முஹம்மத் முஹ்யித்தீன் செய்திருந்தார்.
விளையாட்டுப் போட்டி:
12.30 மணியளவில் Pizza Round Lucky Draw விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. வயதில் கூடிய உறுப்பினர்கள் கூட இவ்விளையாட்டின்போது சிறுவர்களாக மாறி, உற்சாகமாக விளையாடியது என்றும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது, இப்போட்டியில், முஹம்மத் லெப்பை, முஹம்மத் முஹ்யித்தீன், அலாவுத்தீன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
பொதுக்குழுக் கூட்டம்:
13.00 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் துவங்கியது. மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மூத்த உறுப்பினர்களான செய்யித் மூஸா, கே.வி.ஏ.டீ.கபீர் ஆகியொர் முன்னிலை வகிக்க, எச்.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வரவேற்புரையாற்றினார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
கத்தரில் புதிதாகப் பணியாற்ற வந்துள்ள, காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹபீப் முஹம்மத் நிஸாமுத்தீன், கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த நுஃமான், சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த இக்பால், நெய்னார் தெருவைச் சேர்ந்த மஹ்மூத் லெப்பை ஆகியோர் இக்கூட்டத்தில் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக தம்மை அறிமுகம் செய்துகொண்டனர்.
தலைமையுரை:
மன்றத் தலைவரும், கூட்டத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
இக்ராஃவின் புதிய தலைமை...
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் நடப்பாண்டிற்கான தலைமைப் பொறுப்பை கத்தர் காயல் நல மன்றம் ஏற்கவுள்ளதாகக் கூறிய அவர், இக்ராஃவை வலிமைப்படுத்தி, நகரில் கல்வி வளர்ச்சி மேலோங்கிட ஆவன செய்ய வேண்டியது அனைவரின் கடமை என்றார்.
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இக்ராஃவில் உறுப்பினராவதோடு, நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு ஓர் உறுப்பினரோ - இயலாவிடில் இருவராகச் சேர்ந்து ஒரு மாணவருக்கோ கல்வி உதவித்தொகை வழங்க பொறுப்பேற்றுக்கொள்ள (sponsor) முன்வருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த செயல்திட்டங்கள்...
மன்றத்தின் சார்பில் கடைசியாக நடத்தப்பட்ட 3 செயற்குழுக் கூட்டங்கள் குறித்து விவரித்த அவர், ‘ஹீலர் பாஸ்கர்’ அவர்களைக் கொண்டு காயல்பட்டினத்தில் மன்றம் நடத்தவுள்ள வாழ்வியல் விழிப்புணர்வு முகாம் குறித்தும், பொதுமக்கள் தம் காய்கறித் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்வதற்காக ‘மாடித் தோட்டம்’ குறித்த விழிப்புணர்வு செயல்திட்டமும் மன்றத்தால் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அவற்றுக்கான முன்முயற்சிகள் துவக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
காயல்பட்டினத்தின் நடப்புத் தேவைகளை விவரித்த அவர், நகர்நலப் பணிகளைச் செவ்வையாக ஆற்றிடும் பொருட்டு - மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழுவில் இணைந்து பங்கேற்க முன்வர வேண்டும் என்றும், குறிப்பாக புதிய உறுப்பினர்கள் மன்றப் பொறுப்புகளை ஆர்வத்துடன் ஏற்க முன்வருமாறும் கேட்டுக்கொண்ட அவர், வரும் மாதம் முதல் மன்றத்தின் நிர்வாகம் மறுசீரமைக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
கத்தர் வருவோருக்கு வழிகாட்டல்...
வளைகுடாவின் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், தற்காலத்தில் கத்தர் நாட்டில் - படித்தவர்களுக்கு வளமான வேலைவாய்ப்புகள் நிறைவாக உள்ளதாகவும், இதன் காரணமாக காயல்பட்டினத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி கத்தருக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் கூறிய அவர், அவ்வாறு வேலைவாய்ப்பு தேடி காயல்பட்டினத்திலிருந்து வருவோருக்குத் தகுந்த வழிகாட்டுதலை வழங்குவதும், அவர்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை, Bachelors அறைகளில் உடன் தங்க வைப்பதும் மன்றத்தின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இப்பொறுப்பை மன்றத்தின் சார்பில் முறைப்படுத்திச் செய்திடுவதற்காக, (1) ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, (2) முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, (3) கத்தீப் (civil engineer) ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
திருக்குர்ஆன் மனனப் போட்டி...
திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள - மன்ற உறுப்பினர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பேற்படுத்தும் வகையில், வரும் ரமழான் மாதத்தில், திருமறை குர்ஆனின் முதல் 10 ஜுஸ்உகளைப் பாட அளவாகக் கொண்டு, ஹிஃப்ழுப் போட்டி நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மூத்த உறுப்பினர் செய்யித் மூஸா, உறுப்பினர் எம்.என்.சுலைமான் ஆகியோர் அதற்கான ஏற்பாட்டுக் குழுவினராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் அறிவித்தார்.
உழைத்தோருக்கு நன்றி...
இக்கூட்டமும், ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் சிறப்புற அமைந்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து தனதுரையை நிறைவு செய்தார் அவர்.
பொருளாளர் உரை:
மன்றப் பொருளாளர் அஸ்லம், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.
கல்வி, மருத்துவம், அவசரகால உதவி ஆகிய 3 அம்சங்களின் கீழ் செலவினங்களை மேற்கொண்டு வரும் கத்தர் காயல் நல மன்றத்தின் - நடப்பாண்டு நகர்நல செயல்திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்டை) முன்மொழிந்து விவரித்த அவர், நடப்பாண்டின் மொத்த மதிப்பீடாக 5 லட்சம் ரூபாய் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதில் இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களையும் விவரித்துப் பேசினார்.
மன்ற உறுப்பினர்கள் தமது நிலுவைச் சந்தா தொகையை விரைந்து செலுத்திடுமாறும், இயன்றளவு நிலுவையின்றி பார்த்துக்கொள்ளுமாறும், தற்காலத் தேவைகளை அனுசரித்து - ந கர்நலப் பணிகளை நிறைவாகச் செய்திடுவதற்காக - தமது சந்தா தொகைகளை கனிசமாக உயர்த்தி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நடப்பு பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கான அனைத்துச் செலவினங்களுக்கும் - ஆர்வப்படும் மன்ற உறுப்பினர்களிடமிருந்து அனுசரணையாகப் பெறப்படுகிறதேயன்றி, மன்ற நிர்வாகச் செலவினங்களிலிருந்து இவ்வகைக்காக எதுவும் செலவிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மன்ற உறுப்பினர் கே.எம்.மீரான் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் நிறைவுற்றது.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
14.00 மணியளவில், அனைவருக்கும் நெய்ச்சோறு, கோழிக்கறி, ஆனியன் ரய்த்தா ஆகியன மதிய உணவாகப் பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைத் தம் பொறுப்பில் செய்திருந்த மன்ற உறுப்பினர்களான மம்மி, முஹம்மத் லெப்பை, ஹல்லாஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாலை சிற்றுண்டி:
மதிய உணவைத் தொடர்ந்து 15.00 மணியளவில் ஓய்வுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. 15.30 மணியளவில் அஸ்ர் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்டது. 15.45 மணியளவில் அனைவருக்கும் இஞ்சி தேனீர், வடை பரிமாறப்பட்டது.
சிறுவர் போட்டிகள்:
16.00 மணியளவில், சிறுவர்களுக்கான Lemon Spoon விளையாட்டுப் போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. மறுமுனையில், மன்ற உறுப்பினர்கள் பலர் மீண்டும் கைப்பந்து விளையாட்டில் மூழ்க, வழமை போல வேறு சிலர் அரட்டையில் மூழ்கினர். வானிலையும் அந்நேரத்தில் இதமாக இருந்தது பங்கேற்ற அனைவரும் பெரிதும் மகிழ்வித்தது. மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்ததும் விளையாட்டுகள் முடிவுக்கு வந்தன. காயல்பட்டினத்தில் கே.எஸ்.ஸி., யு.எஸ்.ஸி. மைதானங்களில் இணைந்து விளையாடியது போன்ற அனுபவம் கிடைத்ததாக விளையாட்டில் ஈடுபட்டோர் மனமகிழ்ந்து கூறினர்.
மகளிர் நிகழ்ச்சிகள்:
16.00 மணியளவில், திருமறை குர்ஆன், இஸ்லாம், அறிவியல், தமிழ்நாடு, காயல்பட்டினம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி மகளிருக்கான வினா-விடைப் போட்டி நடைபெற்றது. உறுப்பினர் அப்துல்லாஹ்வின் மனைவி முதற்பரிசையும், தவ்ஃபிக்கா ஃபைஸல் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
அடுத்து பட்டன் தைக்கும் போட்டி நடைபெற்றது. 15 நிமிடத்திற்குள் - ஓர் ஆடையில் 15 பட்டன்களைத் தைத்து, 4 துவாரங்களை அடைக்கும் போட்டி அது. உறுப்பினர் சேட் உடைய மனைவி முதற்பரிசையும், ஆயிஷா ஹபீப் கே.வி.ஏ.டீ. இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
17.45 மணியளவில் மஃரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது.
ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி:
18.00 மணியளவில், ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. குர்ஆன், இஸ்லாம், அறிவியல், தமிழ்நாடு, காயல்பட்டினம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. துவக்கமாக ஓரணிக்கு 6 பேர் வீதம், அனைவரும் 7 அணியினராகப் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டியில், அலாவுத்தீன் அணி முதற்பரிசையும், அஸ்லம் அணி இரண்டாவது பரிசையும் பெற்றது. துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ், செயற்குழு உறுப்பினர் கத்தீப் ஆகியோர் இப்போட்டியை அனைவரும் ரசிக்கும் வகையில் உற்சாகமாக வழிநடத்தினர்.
பரிசளிப்பு:
குழந்தைகளுக்கும், போட்டிகளில் வென்றோருக்கும் பரிசளிப்பு விழா, 21.00 மணியளவில் நடைபெற்றது. செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் பரிசளிப்பு விழாவை நெறிப்படுத்தினார்.
அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின்னர், மறக்கவியலா நினைவுகளை மனதில் தாங்கியவர்களாக அனைவரும் 21.30 மணியளவில், குழுப்படம் எடுத்தவர்களாக அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளின் படப்பதிவுகளை, என்ற https://www.dropbox.com/sh/v7adouxwuazeh5r/AAA4kETIpwagsfnyqknwV_aWa#/ இணையதள பக்கத்தில் தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.N.சுலைமான்
படங்கள்:
B.M.ஹுஸைன் ஹல்லாஜ்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (22ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |