ஐக்கிய அரபு அமீரகம் - துபையில் செயல்பட்டு வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமைப்பின் சார்பில், இம்மாதம் 24ஆம் நாளன்று நடத்தப்பட்ட குடும்ப சங்கம நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அதன் செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
துபையில் சிறப்பாக நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்ச்சி! பெற்றோர்களின் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு!!
துபையில் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகம் (KAJA) ஏற்பாடு செய்திருந்த குடும்ப சங்கம நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பர்துபையிலுள்ள அல் முஸல்லா டவரில் 24.04.2015 வெள்ளியன்று நடந்த இந்நிகழ்ச்சி மாலை 8.00 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மௌலவி அப்துல் பாஸித் புகாரீ அவர்கள் “பெற்றோர்களின் பொறுப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த நவீன யுகத்தில், இன்றைய இளம் தலைமுறை சமூகவலைத்தளங்களில் மூழ்கியுள்ள நிலையில், நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி உபதேசிக்க வேண்டும் என்பது குறித்து குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் மேற்கோள்கள் காண்பித்து மிக அழகாக உரையாற்றினார். அதன் மூலம் பெற்றோர்களின் பொறுப்புகள் குறித்த புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது.
காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகத்தின் மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஹாஜியார் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மூத்த செயற்குழு உறுப்பினர் சகோ. இம்தியாஸ் அஹமத் அவர்கள் முன்னிலை வகித்தார்.
முன்னதாக இறைமறை வசனங்களை ஓதி இளவல் அஹமத் தாஹிர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, அந்த இறைமறை வசனங்களை இளவல் அபூபக்கர் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
பின்னர் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகத்தின் பொதுச் செயலாளர் சகோ. ஃபிர்தவ்ஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். “அருள்மழை பொழியும் அல் ஜாமிஉல் அஸ்ஹர்” என்ற தலைப்பில் மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோ. டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப் அவர்கள் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்.
அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அந்தக் காலத்திலேயே அஸ்ஹர் ஏற்படுத்திய மாற்றங்களை அவர் பட்டியலிட்டுக் காட்டினார்.
‘உணர்வாய் உன்னை’ புகழ் சகோ. ஜலாலுத்தீன் அவர்கள் பின்னர் திருக்குர்ஆனைப் புரிதல் குறித்த சிறப்புரையாற்றினார்.
திருக்குர்ஆனில் ஒரு வார்த்தை மாறினாலும் எவ்வளவு பெரிய பிழைகள் ஏற்படும் என்பதை உதாரணங்கள் மூலம் விளக்கியது பார்வையாளர்களை ஈர்த்தது.
இறுதியில் பொருளாளர் முஹம்மத் ரியாஸ் அவர்கள் நன்றியுரை நவின்றார். மொத்த நிகழ்ச்சியையும் செய்தித் தொடர்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடும்பத்துடன் திரளாகக் கலந்து சிறப்பித்த காயல் சகோதர, சகோதரிகளிடம் கருத்துப் படிவம் வழங்கப்பட்டு நிகழ்ச்சி குறித்த கருத்துரைகள் எழுதி வாங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. இறுதியில் கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.அப்துல் ஹமீத்
படங்கள்:
‘புகைப்படப்பிரியன்’ சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் & இப்றாஹீம்
துபை அஸ்ஹர் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |