மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று நீர். இந்த அடிப்படை தேவையை சுற்றி - அடுத்த உலக போர் நிகழும் என்று கூட ஒரு சில வல்லுனர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி, உணவு உற்பத்தி போன்ற காரணத்திற்கு - நீருக்கான தேவை ஒவ்வொரு நாளும்
அதிகரித்து வருகிறது. முக்கியத்துவம் அடிப்படையில் இந்த நீராதாரம் - அரசாங்கங்களால் பகிர்ந்து வழங்கப்படாத காரணத்தால், போராட்டங்களும்
அவ்வபோது வெடிக்கிறது.
காயல்பட்டினத்தில் இருந்து இயங்கும் DCW தொழிற்சாலைக்கான நீர் தேவை - தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாகவும் (3 Million Gallons Per Day; 3 MGD), குடிநீர் வடிகால் வாரியத்தின் தொழிற்சாலைகளுக்கான சிறப்பு திட்டம் மூலமும் (0.5 Million Gallons Per Day; 0.5 MGD) பூர்த்தி செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து வருகிறது. 1 காலன் என்பது சுமார் 4.5 லிட்டர்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து தினசரி 3 மில்லியன் (30 லட்சம்) காலன் தண்ணீர் எடுக்க - தமிழக அரசின் பொதுப்பணி துறை, DCW நிறுவனத்திற்கு 1994ம் ஆண்டு
அனுமதி கொடுத்தது. இந்த அனுமதி 1991-1996ம் கால கட்டம் வரையிலானதாகும்.
இந்த ஒப்பந்தத்தை - தற்போது காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தீர்ப்பாயத்தில் எதிர்த்துள்ள விரிவாக்க திட்டத்திற்கான
ஆவணத்தில், DCW நிறுவனம் இணைத்திருந்தது. தெளிவில்லாத அதன் வாசகங்களும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தெளிவான
வாசகங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.
DCW நிறுவனம் தனது விரிவாக்க EIA அறிக்கையில் இணைத்திருந்த தெளிவில்லாத நீர் அனுமதி அரசாணை
DCW நிறுவனத்திற்கான தெளிவான வாசகங்கள் கொண்ட நீர் அனுமதி அரசாணை
1996 ம் ஆண்டே அனுமதி முடிவுற்றிருந்தாலும், DCW தொழிற்சாலை தொடர்ந்து - தாமிரபரணி ஆற்றில் இருந்து - நீர் பெற்று வருகிறது. மேலும் -
DCW தொழிற்சாலை, தாமிரபரணி ஆற்று நீர் சம்பந்தமாக - அரசு பொதுப்பணி துறை மீது தொடர்ந்துள்ள வழக்கு (WP 37936/2002) நீண்ட நாட்களாக
சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலும் உள்ளது.
DCW நிறுவனத்தின் ஆவணப்படி - அதன் அன்றாட நீர் தேவை (விரிவாக்க திட்டங்கள் தவிர்த்து) - 9938 கிலோ லிட்டர்.
விரிவாக்க திட்டத்தின் மூலம் கூடுதலாக 4874 கிலோ லிட்டர், ஒவ்வொரு தினமும் தேவைப்படும்.
DCW நிறுவனத்தின் 2006ம் ஆண்டு விரிவாக்க திட்ட அறிக்கையில் இருந்து
DCW நிறுவனத்தின் 2011ம் ஆண்டு விரிவாக்க திட்ட அறிக்கையில் இருந்து
DCW நிறுவனம் அன்றாடும் பயன்படுத்தும்/ பயன்படுத்த நாடும் நீரின் அளவு எவ்வளவு பெரியது என்பதை புரிந்திட, காயல்பட்டினம் நகரின் அன்றாடும்
குடிநீர் தேவை விபரம் உதவியாக இருக்கும்.
மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் தேக்கத்தில் இருந்து தினமும் காயல்பட்டினம் 20 லட்சம் லிட்டர் - அதாவது 2000 கிலோ லிட்டர் - தண்ணீர் பெறுகிறது.
DCW நிறுவனத்தின் தேவையோ - அன்றாடும், இதைவிட 5 மடங்கு அதிகமாகும். அது மட்டும் அல்லாமல், விரிவாக்க திட்டத்திற்கு பிறகு - இது - காயல்பட்டினம் நகர் குடிநீர் பயன்பாட்டை விட - சுமார் 7.5 மடங்கு அதிகமாகும்.
ஏப்ரல் 2008 முதல் பிப்ரவரி 2015 வரை - DCW நிறுவனம், தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுத்த நீரின் அளவினை - காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது. இதில் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், அந்நிறுவனம் பெற்ற நீர் அளவு இல்லை.
இவ்வகைக்கு - DCW நிறுவனம், பொதுப்பணி துறைக்கு செலுத்திய தொகை விபரத்தையும், காயல்பட்டணம்.காம் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து - ஆண்டொன்றுக்கு, சுமார் 20 லட்சம் KLD அளவு தண்ணீர், DCW நிறுவனம் பெற்றதாக பொதுப்பணி துறை ஆவணம் தெரிவிக்கிறது. இதற்கு அந்நிறுவனம் செலுத்தும் தொகை சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும். அதாவது - 1000 லிட்டருக்கு சுமார் 50 பைசா மட்டுமே!
இத்தொகையை தான் - தமிழக ஆறுகளில் இருந்து நீர் பெறும், தொழிற்சாலைகள் அனைத்தும் அரசுக்கு செலுத்துகின்றன என தெரிகிறது (G.O. Ms.No.474 dated 13.11.2001).
காயல்பட்டினம் போன்ற உள்ளாட்சி மன்றங்கள், 1000 லிட்டருக்கு - 4.50 ரூபாய், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்துகின்றன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், தொழிற்சாலைகளுக்கு, 1000 லிட்டருக்கு - 15 ரூபாய் என்ற கணக்கில் தான், நீரும் வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும், காயல்பட்டினம் நகராட்சி - குடிநீர் வகைக்கு, 33 லட்ச ரூபாய் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்துகிறது. இது போக, குடிநீர் வகைக்கான மின்சார செலவு தனியாக செலுத்தப்படுகிறது.
[நகராட்சிக்கு பொது மக்கள் - குடிநீர் வரியாக, 600 ரூபாய் செலுத்துகின்றனர். DCW தொழிற்சாலை, அரசுக்கு செலுத்தும் தொகையோடு ஒப்பிட்டால், நகரின் குடிநீர் வரி செலுத்தும் ஒவ்வொருவரும், ஆண்டொன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறவேண்டும்!]
ஆனால் - காயல்பட்டினம் நகரின் குடிநீர் வகை தேவையை விட, 3 மடங்குக்கு மேல் நீர் பெறும் DCW நிறுவனம், நகராட்சி செலுத்தும் தொகையை விட சுமார் 3 மடங்கு குறைவாகவே, அரசுக்கு செலுத்துகிறது.
அதிகம் இல்லை ஜெண்டல்மென், 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசா தான்!
[Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 6:30 pm / 28.4.2015] |