காயல்பட்டினம் நகராட்சியில், கடந்த நான்காண்டுகளாக - தனது கண்காணிப்பையும் மீறி நடந்து வரும் முறைகேடுகள் குறித்து, தான் அளித்துள்ள புகார்கள் மீது விசாரணைக் குழு அமைக்க, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தமிழக உள்ளாட்சித் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்துள்ளார். இப்பேட்டியின் அசைபடப் பதிவை, கீழ்க்காணும் படத்தில் சொடுக்கிக் காணலாம்:-
பேட்டியின் வாசகம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த நான்கு வருடங்களாக - லஞ்சம், ஊழல் இவற்றுக்கு எதிராக நான் போராடி வருகின்றேன். வெளிப்படையான நிர்வாகத்தைத் தர வேண்டும் என்பதற்காக நான் மேற்கொள்ளும் இப்போராட்டத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எனது மக்களுக்கும் தெரியும்.
இந்தச் சூழலில், காயல்பட்டினம் நகராட்சியில் ஒரு சில முறைகேடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக, நகராட்சித் துறை உயரதிகாரிகளுக்கு, அவ்வப்போது தகுந்த ஆதாரங்களுடன் நான் தகவல் தந்திருக்கின்றேன்.
அண்மையில் கூட, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் - சில முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
எனது இதுபோன்ற நடவடிக்கைகளால் - காயல்பட்டினம் நகராட்சியில் ஆணையர் காந்திராஜன் அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நகராட்சியின் நிதியைக் கொண்ட வங்கிக் கணக்கு விபரங்களை பலமுறை கேட்டும் எனக்குத் தரப்படவில்லை. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அஞ்சல் மூலம் அவற்றைக் கேட்ட பின்பும் கூட, அவர்களது பதில் முறையாக இல்லை.
இந்தச் சூழ்நிலையில், நகராட்சியின் காசோலை அளிக்கப்பட்ட விபரங்கள் அடங்கிய பதிவேடு புத்தகத்தை நகராட்சி அலுவலரிடமிருந்து பெற்று, நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆணையர் காந்திராஜ் அவர்கள் எனது அறைக்குள் வேகமாக நுழைந்து, நான் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கணக்கு ஆவணத்தை பட்டென்று மூடி, என் கையிலிருந்து சடாரென்று அவர் பிடுங்கிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, உடனடியாக நான் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்குத் தகவல் தந்துள்ளேன். சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களுக்கு ஈமெய்ல் மூலம் தகவல் அளித்துள்ளேன்.
சட்டத்திற்குப் புறம்பான – ஆணையர் காந்திராஜன் அவர்களது இந்த நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தோடு காவல்துறையில் அவர் என் மீது ஒரு பொய்யான புகாரை அளித்துள்ளார்.
இந்த அடிப்படையில், ஆணையர் காந்திராஜன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த நான்கு ஆண்டுகளில் காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உள்ளாட்சித் துறையின் மூலமாக ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். அவ்வாறு அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜனின் இந்நடவடிக்கையைக் கண்டித்து, நகரில் பின்வருமாறு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது:-
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |