திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் 522 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.21லட்சம் மதிப்பிலான நிதி உதவியை ஆட்சியர் எம்.ரவி குமார் வழங்கினார்.
திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற வெவ்வேறு விழாக்களில் 522 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து, 26 ஆயிரத்து 800-க்கான கல்வி, திருமணம், இறப்பு போன்ற நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் வழங்கினார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்ததாவது:
தமிழக அரசு எந்த மாநில அரசும் வழங்காத பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் கல்வி கடன், இலவச பட்டா, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு ஒதுக்கும் நிதிகளை நிதியாண்டு முடியும் மார்ச் மாதம் வரை காத்திருக்காமல் உடனுக்குடன் தகுதியுள்ள பயனாளிக்கு வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்டட உதவிகள் வழங்குவதில் முன்னோடி மாவட்டமாக தூத்துக்குடி இருப்பதற்கு வருவாய் துறை அலுவலர்களின் உழைப்பும் காரணமாகும். அரசு அலுவலர்கள, தொழிலாளர்கள் போக எஞ்சிய வேளாண்மைத்தொழில் மற்றும் வேளாண்மைத் தொடர்புடைய 14 உப தொழில் செய்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
அரசினுடைய பெரும்பான்மையான திட்டங்கள் பெண்களை சார்ந்து வழங்கப்படுகின்றன. ஆனால் ஆண்களுக்கும் திருமண உதவித்தொகை வழங்கும் ஒரே திட்டம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளை போல இவ்வாண்டும் ஆகஸ்ட் மாதத்தில் கல்விக்கடன் முகாம் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2400 மாணவர்களுக்கு ரூ.12 கோடி அளவிற்கு தேசிய மையமாக்கப்பட்ட வங்கியின் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் எவ்வித சொத்து ஜாமீன் இல்லாமல் ரூ.4 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 263 பொது சேவை மையங்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் மூப்பு அடிப்படையில் மாதம் 1000 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. 5000 நபர்களுடைய பெயர் வரிசைப்படி மாவட்ட வலையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். கூட்டுக்குடும்பமாக இருக்கும் நபர்கள் குடும்ப அட்டைக்காக குடும்பத்தை இரண்டாக பிரித்துவிடாதீர்கள்.
இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் எஸ்.ஞானசேகரன், வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன், அழகம்மை, திருச்செந்தூர் பேரூராட்சி தலைவர் (பொறுப்பு) ராஜாநளா, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஹேமலதா லிங்ககுமார், காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதாசேக், சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
www.tutyonline.com
[Administrator: கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 7:30 pm / 15.06.2015] |