காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் நடப்பாண்டு பட்டமளிப்பு விழா இம்மாதம் 10ஆம் நாள் புதன்கிழமையன்று, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
அன்று 09.00 மணியளவில் திக்ர் ஹல்கா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் துவங்கின. கல்லூரியின் முதல்வரும், சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமை தாங்கினார்.
கல்லூரி மாணவர்களால் இறைமறை வசனம் கிராஅத்தாக ஓதப்பட்டு, அரபி பாடலும் பாடப்பட்டது. கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ வரவேற்புரையாற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் விளம்பூரைச் சேர்ந்த டீ.நாகூர் ஸாஹிப் என்பவரது மகன் என்.சத்தாம் ஹுஸைன் என்ற மாணவர், கல்லூரியில் 7 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றுது, இவ்விழாவில் ‘ஆலிம் ஃபாஸீ’ பட்டம் பெற்றார். அவருக்கு, ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ பட்டச் சான்றிதழை வழங்கினார்.
பள்ளி செல்லும் மாணவர்களுக்கான தீனிய்யாத் பிரிவில் 8 ஆண்டுகள் முழுமையாகப் பயின்று முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கல்லூரியின் முதல்வர் சான்றிதழ்களை வழங்கினார்.
கல்லூரியின் துணை முதல்வரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
கல்லூரி பேராசிரியர்கள், மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உள்ளிட்டோர், திண்டுக்கல் யூஸுஃபிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் நூஹ் ஃபாஸீ நன்றி கூற, ஜாவியா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஹாஃபிழ் ஒய்.எம்.அப்துல்லாஹ் ஃபாஸீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
முன்னதாக, இம்மாதம் 06ஆம் நாள் சனிக்கிழமையன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும், தீனிய்யாத் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கான பல்சுவை சன்மார்க்கப் போட்டிகளும் நடைபெற்றன.
அவற்றில் வெற்றி பெற்றோருக்கும், கடந்த கல்வியாண்டில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பட்டமளிப்பு விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ்
ஜாவியா அரபிக் கல்லூரியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|