ஹாங்காங்கில் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 7ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 30-05-2015 அன்று ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் 7ஆம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் 30-05-2015 சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு ஜனாப் எம்.என். ஷேக் சலாஹுதீன், ஜனாப் ஏ.ஆர். அப்துல் வதூத், ஜனாப் பி.எம்.எஸ்.முஹ்ஸின் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்ட நுழைவாயிலில் உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.
அமைப்பின் செயற்குழு உறுப்பினர் டி.செய்யது இஸ்மாயில் அனைவரையும் வரவேற்று பேசியதோடு, கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேரவையின் கடந்த பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரவை செயலாளர் எம்.செய்யது அஹமது பேசினார்.
ஆண்டறிக்கை:
பின்னர் பேரவையின் ஏழாம் ஆண்டறிக்கையை, பேரவைத் தலைவர் ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:-
>>> தொழில் செய்திட திறமையிருந்தும் பொருளாதார நலிவு காரணமாக தொழில் செய்ய இயலாத நமதூர் மக்களிடமிருந்து தொழிற்கருவிகள் உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்தறியப்பட்டு, இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 66 பயனாளிகளுக்கு மொத்தம் 5 லட்சம் ரூபாய் செலவில் தொழிற்கருவிகள் வழங்கப்பட்டன.
>>> பேரவை, கத்தார் காயல் நல மன்றம் மற்றும் ஷிஃபா அமைப்புகளுடன் சேர்ந்து புற்றுநோய் பரிசோதனை 7ஆவது இலவச முகாமை, 12 அக்டோபர் 2014 ல் நமதூர் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
>>> நமதூர் மக்களுக்காக நல்லமுறையில் கல்வி பணியாற்றி வரும் இக்ரா கல்வி சங்கத்திற்கும், மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பிற்கும் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கும், ஷிஃபாவின் மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு உதவித் தொகையையும் வழங்கியது.
>>> நமது பேரவையால் செய்யப்பட்டு வரும் நகர்நலப் பணிகள், உதவித் திட்டங்களுக்கு தோள் கொடுக்கும் முகமாக, ஹாங்காங் வாழ் தாய்மார்கள் தமது மனப்பூர்வமாக அளித்து வரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரவு – செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து நடப்பு பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை பேரவை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹமது கபீர் சமர்ப்பிக்க கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதளித்தது.
வாழ்த்துரைகள்:
அதன் பின்னர் மூத்த ஆலோசனையாளர் ஜனாப் எம்.என். ஷேக் சலாஹுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
பேரவையின் செயற்பாடுகளில் ஹாங்காங் மற்றும் சீனா வாழ் அனைத்து காயலர்களும் சேர்ந்து நமதூருக்கான நலப்பணிகளை செய்ய உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவ கருத்துரை:
அதன் பின்னர் தாயகத்திலிருந்து மருத்துவ மாநாட்டிற்காக ஹாங்காங் வந்திருந்த திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர் நமது மண்ணின் மைந்தர் டாக்டர் பி.எம்.டி. மொஹிதீன் அப்துல் காதர் அவர்கள் கண்ணை பேனுதல் மற்றும் கண் வியாதிகள் பற்றி நல்ல கருத்துக்களை பேரவை உறுப்பினர்களுக்கு பரிமாறினார்.
மற்ற நிகழ்வுகள்:
பேரவையின் ஷிஃபா பிரதிநிதி, செயலாளர் எம்.செய்யத் அஹ்மத் ஷிஃபாவின் செயற்பாடுகளை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.
டி.செய்யது இஸ்மாயில் நன்றி கூறினார். நிறைவாக கவ்லூன் மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஃபிழ் எம்.ஏ.கே. ஷூஅய்ப் நூஹ் மஹ்ழரி அவர்களின் இறை வேண்டுதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
கூட்டத்தில் பேரவையின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துக் கொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் கூட்டம் தொடங்கிய பொழுது சுவையான சூப்பும் கூட்ட நிறைவில் சுவையான காயல் களரி கறி சாப்பாடும் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் பேரவையின் முந்தைய (6ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |