தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடலோரப் பகுதிகளில், விளாத்திகுளத்தில் துவங்கி - சாத்தான்குளம் வரை உயரலைக் கோடு எல்லைக் கல் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. காயல்பட்டினம் கடற்கரையில், திருவைகுண்டம் வனச்சரகத்தின் ஏரல் பிரிவு வனவர் பெரியசாமி மேற்பார்வையில் 31.03.2015 அன்று 17.30 மணியளவில் எல்லைக் கல் நிறுவப்பட்டது. இதுகுறித்து, கடற்கரையின் வடமுனையில் நிறுவப்பட்டிருந்த கல்லைப் படமெடுத்து, அதே நாளில் காயல்பட்டணம்.காம் செய்தியும் வெளியிட்டிருந்தது.
இந்தியா முழுவதும், கடலோரப் பகுதிகளில், உயரலைக் கோடு (High Tide Line) எல்லையை அடையாளப்படுத்த எல்லைக் கல் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் எல்லைக் கல் நிறுவும் பணியை, அந்தந்த வட்டார வனச் சரக அலுவலர்கள் கண்காணிக்க பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் எல்லைக் கல் நிறுவும் பணியை தாங்கள் கண்காணித்து வருவதாகவும், திருவைகுண்டம் வனச்சரக அதிகாரி நெல்லை நாயகம் அப்போது தெரிவித்திருந்தார்.
இவ்வாறிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன், காயல்பட்டினம் கடற்கரையின் தென்முனையில் - ஆண்கள் கழிப்பறை அருகில் இதே போன்று நிறுவப்பட்ட உயரலைக் கோடு எல்லைக் கல்லைப் படமெடுத்து, அது என்ன கல் என்று தெரியவில்லை என்றும், அதை வேறு வகையான கல்லாக அடையாளப்படுத்தும் முன் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் வாட்ஸ் அப் மூலம் சிலர் பரவ விட்டுள்ளனர்.
இக்கல் நிறுவப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் உண்மை நிலை பற்றி அறிவதற்கு எந்த முயற்சியையும் எடுக்காமல், பொத்தாம்பொதுவாக ஒரு தகவலை சிலர் பொறுப்பற்ற நிலையில் பரவ விட்டதால், நகரில் அதுகுறித்து தற்போது அதிகம் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காயல்பட்டினம் கடற்கரையின் வடமுனையில் நிறுவப்பட்டுள்ள எல்லைக் கல்:-
தென்முனையில், ஆண்கள் கழிப்பறையருகில் நிறுவப்பட்டுள்ள எல்லைக் கல்:-
நிறுவப்பட்ட அக்கல்லில், ஆங்கிலத்தில் HTL என்று தெளிவின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லை நிறுவிய அதிகாரிகள், அது எதற்காக நிறுவப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் குறியீட்டை முறையாகப் பதியாததும் இதுபோன்ற தவறான பரப்புரைகளுக்கு வழிவகுப்பதாய் அமைந்துள்ளது.
|