சஊதி அரபிய்யா - புனித மதீனா முனவ்வரா நகரில், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காயலர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்:-
எல்லாம் வல்லோன் அல்லாஹ்வின் ஹபீபான நம் உயிருக்கும் உயர்வான உத்தம தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லம் அமைந்துள்ள பள்ளியாகிய மாண்புயர் மதீனா மஸ்ஜிதுன் நபவியின் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகள்.
அஸ்ஸலாமு அலைக்கும். அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லோன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
மாண்புகள் யாவும் பல தன்னகத்தே கொண்டுள்ள அமைதி மேவும் அழகிய பூமி புனிதமிகு மதீனாவில், நம் உயிரினும் மேலான மனிதருள் மாணிக்கம் அண்ணல் நபிகள் கோமான் முஹம்மது ( صلى الله عليه وسلم ) அவர்களின் பள்ளியான, மஸ்ஜிதுந் நபவியில் கடந்த 26-06-2015,வெள்ளியன்று நடைபெற்ற நோன்பு திறக்கும் இந்த இனியதோர் நிகழ்வில் நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பள்ளியின் உள்வளாகத்தில் ஜம்ஜம் தண்ணீர், தயிர், ரொட்டி, பல ரக பேரிச்சம் பழங்கள், அரபி காவா, தேனீரும், மேலும் பள்ளியின் வெளிப்புற மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர், பேரிச்சம் பழங்களுடன் பலவகையான உணவு வகைகளும், கனி வகைகள் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்படுகின்றன.
எல்லாவற்றையும் விட மிக்க சிறப்பு என்னவெனில், வந்தாரை வாஞ்சையுடன் வரவேற்கும் அழகிய பண்பிற்கு சொந்தக்காரர்களான மதீனாவாசிகளான இவர்கள், வல்லோன் அல்லாஹ்வும், அவனது இறுதிதூதர் வள்ளல் நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் விருந்தாளிகளை அதுவும் நோன்பாளிகளை எப்படி சங்கை செய்ய சொல்லியுள்ளார்களோ அதுபிரகாரம் நோன்பாளிகளை கனிவாக வரவேற்று கரம் பிடித்து தாங்கள் ஏற்பாடு செய்துள்ள இடங்களுக்க அன்பொழுக அழைத்து வந்து அமர வைத்து சங்கை செய்வதை உலகில் எங்கும் காண கிடைக்காத கண் கொள்ளா காட்சியாகும்..மாஷா அல்லாஹ்.
இவைகளை சொல்வதற்கு வார்த்தைகள் போதாது என்றாலும், இந்த நல்லதோர் நோன்பு திறக்கும் நிகழ்வில்
நாங்கள் கலந்து கண்ணும், கல்பும் குளிர்ந்து மகிழ்ந்தது போல் , நம்மில் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் இனிய துவா பொருட்டால் விரைவில் நசீபாக்கி தருவானாக ஆமீன்.
தகவல்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படங்கள்:
சட்னி S.A.K.முஹம்மத் உமர் ஒலீ |