நெல்லை மாவட்டம் பேட்டை - ஃபைளுர்ரஹ்மான் அரபிக் கல்லூரியின் 37ஆம் ஆண்டு விழா மற்றும் 32ஆவது பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் - திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தமைக்காக ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
07.06.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 09.00 மணி முதல் 13.00 மணி வரை, பேட்டை ரஹ்மானிய்யா பள்ளிவாசலில், தாஜுஷ் ஷரீஅத் எஸ்.ஆர்.ஷம்சுல் ஹுதா ஹஸ்ரத் நினைவரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும், கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ ஷெய்குல் ஹதீஸ் ஏ.இ.முஹம்மத் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியைச் சேர்ந்த என்.எஸ்.நெய்னா முஹம்மத் என்பவரது மகன் ஹாஃபிழ் என்.எம்.ஹிதாயத்துல்லாஹ் ஸர்ஜூன், நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் அப்துல் காதிர் என்பவரது மகன் ஹாஃபிழ் வி.எம்.எச்.முஹ்யித்தீன் முபாரக் ஆகிய - காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட, மொத்தம் நான்கு பேர் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டச் சான்றிதழ் பெற்றனர்.
மாணவர் ஹாஃபிழ் வி.எம்.எச்.முஹ்யித்தீன் முபாரக் பட்டம் பெற்றதையொட்டி, அவர் சார்ந்த காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி அன்று மாலையில் நடைபெற்றது. ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதினார். மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ வாழ்த்துரையாற்றினார். மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆ இறைஞ்ச, அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர், பட்டம் பெற்ற மாணவரை - பைத் பாடி அவரது இல்லம் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்
கடந்த 2013ஆம் ஆண்டில், பேட்டை ஃபைளுர்ரஹ்மான் அரபிக்கல்லூரியில் காயலர் பட்டம் பெற்ற தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |